சட்டவிரோத மதுவிற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்க ஏ.டி.எஸ்.பிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது!

சட்டவிரோதமாக மது விற்பதை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இருவர் ராமநாதபுரத்தில் பிடிபட்டனர்.

கள்ளத்தனமாக மது விற்க லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள்

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதிகளில் மதுக்கடைகள் இல்லை. இதனால் பாம்பனில் இயங்கி வரும் மதுக்கடைகளில் இருந்து ஏராளமானோர் மதுப்பாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு  விற்று வருகின்றனர். இதற்கு பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களும் உடந்தையாக இருந்து வருகின்றனர். சட்டவிரோதமாக மது விற்பவர்களிடம் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதலாக பணம் பெற்றுக்கொண்டு மொத்த மொத்தமாக மது பாட்டில்களை விற்பனை செய்கின்றனர்.

பாட்டில் ஒன்றுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக கொடுத்து வாங்கி வரப்படும் மதுபாட்டில்களை ராமேஸ்வரம் பகுதியில் சட்டவிரோதமாக விற்பதில் பெரும் கும்பல் ஈடுபட்டு வருகிறது. இடம் மற்றும் நேரத்தை பொறுத்து விற்கப்படும் பாட்டில்களுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் குறிப்பிட்ட சிலரது செல்போன்களைத் தொடர்பு கொண்டால் நேரடியாக வீட்டிற்கே வந்து டோர் வெலிவரியும் செய்து வருகின்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் மதுக்கடைகள் இருந்தபோது விற்பனையான மதுவை விட தற்போது சட்டவிரோமாக கூடுதலாக மது விற்பனை நடந்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்படி, மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை திடீர் சோதனைகள் நடத்தி சட்டவிரோதமாக மது விற்பவர்களை கையும் களவுமாக பிடித்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்னர், ஒரே நாளில் 3,180 மதுபாட்டில்கள் பிடிபட்டன. இதனால் மது விற்பனையில் ஈடுபட்ட பலர் பாதிப்படைந்தனர்.

இந்நிலையில், சட்டவிரோதமாக மதுவிற்கும் சிலர் ஒன்று சேர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர். இதற்கென பாம்பனைச் சேர்ந்தவர்களான மோகனிடமிருந்து ரூ.1.60 லட்சம், திரவியம் மற்றும் அன்பு என்பவர்களிடமிருந்து தலா ரூ.35 ஆயிரம், கதிர் மற்றும் ரியாஸ் என்பவர்களிடமிருந்து தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2.80 லட்சத்தை  ராமேஸ்வரத்தை சேர்ந்த புரோக்கர் முருகனிடம் கொடுத்துள்ளனர்.முருகன் அந்தப்பணத்தை ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரையிடம் அவரது அலுவலகத்தில் கொடுக்க முயன்றிருக்கிறார். அப்போது ஏ.டி.எஸ்.பி. அவரைக் கைது செய்ததுடன், அவரோடு வந்திருந்த மற்றொரு நபரான மோகன் என்பவரையும் கைது செய்தார். மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ.2.80 லட்சத்தையும் பறிமுதல் செய்துள்ளார்.

அதேபோல், ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரைக்கு பணம் கொடுக்க வேண்டும் என வசூலித்தபோது முருகனிடம் பணம் கொடுத்த அன்பு, திரவியம், ரியாஸ், கதிர் ஆகிய 4 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் கைது செய்யப்பட்ட இருவரையும் ராமநாதபுரம் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனாவிடம் ஒப்படைக்க இருப்பதாக ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!