வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (14/08/2018)

கடைசி தொடர்பு:06:25 (14/08/2018)

கடன் வாங்கி கட்டிய வீட்டை அபகரித்து கொண்ட மகன்; தீ குளிக்க முயன்ற பெற்றோர்

கடன் வாங்கி கட்டிய வீடுகளை பெற்ற மகனும், மருமகளும் ஏமாற்றி அபகரித்து கொண்டதாக கூறி வயது முதிர்ந்த பெற்றோர் தீ குளிக்க முயன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் சண்முகம்(72), இவரது மனைவி முத்துலெட்சுமி(68). இவர்கள் இருவருக்கும் ராமநாதபுரம் நீலகண்டி ஊருணி பகுதியில் சொந்தமாக 6 வீடுகள் உள்ளது.இந்த வீடுகளை ரூ.15லட்சம் கடன் வாங்கி கட்டியுள்ளனர். தற்போது இந்தச் சொத்தை மகனும்,மருமகளும் சேர்ந்து ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டனர்.சொத்தின் மூலம் கிடைத்து வந்த மாத வாடகையையும் கொடுக்க மறுக்கின்றனர். இதனால் வருமானத்திற்கு வழியின்றி இருந்த சண்முகம் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.  இதனால் மனம் வெறுத்த சண்முகமும்,முத்துலெட்சுமியும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்ய முயன்றனர்.அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் உடனடியாக அவர்கள் இருந்த இடத்துக்கு ஓடிச்சென்று அவர்கள் உடலின் மீது  தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார்.  

இதுகுறித்து தகவல் அறிந்த கேணிக்கரை காவல்நிலைய அதிகாரிகள் அவர்கள் இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.வயது முதிர்ந்த காலத்தில் இந்த விபரீத முடிவுக்கு வந்தது குறித்து விளக்கிய சண்முகம், ''என் மகன் முனீஸ்வரனும்,மருமகள் சுகுமாரியும் சேர்ந்து என் பெயரில் இருந்த சொத்தை உயில் எழுதி வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லி இனாம் செட்டில் மென்ட் போட்டுக் கொண்டார்கள்.பின்னர் எனது சொத்தை என் மகன் முனீஸ்வரன் பெயருக்கு மாற்றமும் செய்து கொண்டனர்.நான் எனது சொந்த முயற்சியில் கடன் வாங்கி கட்டிய இடத்தை சொத்து மோசடி செய்து ஏமாற்றி அபகரித்துக் கொண்டனர்.எனக்குச் சேர வேண்டிய மாத வாடகையையும் அவர்களே வாங்கிக் கொள்கின்றனர்.வீடு கட்டுவதற்கு கடன் வாங்கியது உட்பட மொத்தம் ரூ20 லட்சம் செலவாகியுள்ளது.     கடனையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை.இது தொடர்பாக ராமநாதபுரம் பஜார் காவல்நிலையத்தில் புகார் செய்தும் எந்த பலனும் இல்லை.எனவே வேறு வழியில்லாமல் நானும் என் மனைவியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றோம்'' என்றார்.