பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் அதிரடி... 3 பொறுப்புகளுக்கான அதிகாரிகள் மாற்றம்...!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த சிண்டிகேட்  கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாரதியார் பல்கலைக்கழகம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கணபதி லஞ்ச வழக்கில் கைதாகவே, அவரை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சஸ்பெண்ட் செய்தார். இதையடுத்து, பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் தலைமையில் மூன்று பேர் அடங்கிய, துணைவேந்தர் பொறுப்பு குழு நியமிக்கப்பட்டது.

இதனிடையே, “கணபதிக்கு முன்பு இருந்தே பல்கலைக்கழகத்தின் முக்கிய பொறுப்புகளில் பல ஊழல் பெருச்சாளிகள் இருந்து வருகின்றனர். அவர்களையும் நீக்க வேண்டும்” என்று பல்கலைக்கழக ஊழியர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் இன்று நடந்தது.

இதில், ஆர் அண்ட் டி (Research and Development) இயக்குநராக இருக்கும் ஞானசேகரன் அந்தப் பொறுப்பில் நீக்கப்பட்டு, சைக்காலஜி துறை தலைவர் வேலாயுதம், ஆர் அண்ட் டி பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த அன்பழகன் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, நிதித்துறையில் எஸ்.ஒ-வாக இருக்கும் கந்தசாமி மக்கள் தொடர்பு அதிகாரியாக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டாளராக இருந்த ராமசுப்பிரமணியன் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நேனோ சயின்ஸ் துறை ராஜேந்திர குமாருக்கு, கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஞானசேகரன் உதவிப் பேராசிரியர் பணிக்கு லஞ்சம் வாங்கும் வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

பாரதியார் பல்கலைக்கழகம்

  “பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் மூன்று பேர் மீதும் ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. இதில், ஆர் அண்ட் டி பொறுப்புக்கு ஆப்பு வைக்கும் தகவலை எப்படியோ தெரிந்துகொண்ட ஞானசேகரன் உயரதிகாரிகளை அழைத்து, ‘நான் இன்னும் கொஞ்ச வருஷம்தான் இருப்பேன். அதுவரை, இந்தப் பொறுப்பு என்கிட்டயே இருக்கட்டும். பார்த்து பண்ணுங்க’ என்று கெஞ்சியுள்ளார். மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கனகராஜ் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர், கன்ட்ரோலர் பிரிவில் இருந்தபோது, மாணவி ஒருவருக்கு கூடுதலாக மதிப்பெண் போடப்பட்டது. அதன் பின்னணியில் உதவியது கனகராஜ்தான். மேலும், பல்வேறு சீனியர்கள் இருக்கும்போது, ஜூனியரான. அவரை ஏன் நியமிக்க வேண்டும்? அவரது நியமினத்துக்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம்” என்கின்றனர் பல்கலைக்கழக ஊழியர்கள்.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவாலை தொடர்பு கொண்டபோது, “இவை அனைத்தும் பொறுப்பு அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டதுதான். பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிறைய கோஷ்டிகள் இருக்கின்றன. அந்த கோஷ்டிகளில் இல்லாமல், வெளியில் இருந்து தேர்ந்தெடுத்து, விரைவில் இந்தப் பொறுப்புகளில் பணியமர்த்தப்படுவார்கள்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!