வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (14/08/2018)

கடைசி தொடர்பு:08:50 (14/08/2018)

கூட்டுறவு வங்கியில் மனுக்களைக் கிழித்ததாக அ.தி.மு.க எம்.எல்.ஏ மீது புகார்! தேர்தல் ஒத்திவைப்பு!

தூத்துக்குடியில், அ.தி.மு.க கோஷ்டிப் பூசலால் ஏற்பட்ட மோதலாலும், எம்.எல்.ஏ., சண்முகநாதன் வங்கி அலுவலகத்துக்குள் நுழைந்து வேட்புமனுக்களைக் கிழித்தார் என்ற குற்றச்சாட்டினாலும் கூட்டுறவு வங்கி இயக்குநர்களைத் தேர்வுசெய்யும் தேர்தல்,  இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டுறவு வங்கி

 

தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் பல கட்டமாக நடைபெற்றுவருகிறது. தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கியில், 11 இயக்குநர்கள் பதவிகளுக்காக 68 பேர் வேட்புமனுக்கள் தாக்கல்செய்திருந்தனர். இதில், கடந்த 11-ம் தேதி 25 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் ஒட்டப்பட்டது. இதற்கிடையில், மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளான நேற்று (13.08.18) வரை 8 பேர் திரும்பப் பெற்றனர்.  கோபி கிருஷ்ணன் என்பவரது மனுவை வேறொரு நபர், போலியாகக் கையெழுத்திட்டு திரும்பப் பெற்றுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக புகார் அளிக்க ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., சண்முகநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் மாவட்டப் பதிவாளர் ஆகியோரிடம் புகார் அளிக்கச் சென்றார். அதிகாரிகள் இல்லாததால் திரும்பிச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த வங்கியில் 11 இயக்குநர்கள் பதவிகளுக்கு விண்ணப்பித்த 68 பேரில், 25 பேர்தான் தகுதியானவர் என ஒரு பட்டியலைக் கூறுகிறார். இதில் போலி நபர்கள்மூலம் போலிக் கையெழுத்து போடப்பட்டு வேட்புமனு வாபஸ் வாங்கியதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. விருப்பமில்லாதவர்கள் பெயரை அதிகாரிகளாகவே நீக்கியுள்ளனர். அரசுக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கும் வகையில் அதிகாரிகளே பணம் வாங்கிக்கொண்டு இப்படிச் செயல்படுகிறார்கள்.” என்றார்.

சண்முகநாதன் புகார் கூறச் சென்ற சில நிமிடங்களில், கூட்டுறவு சங்க அலுவலக அறிவிப்பு பலகையில் 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் ஒட்டப்பட்டது. அதில், கோபி கிருஷ்ணனின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த வேட்பாளர்களில் ஒருவரான அமிர்த கணேசன்,” கூட்டுறவு வங்கித் தேர்தலில் அ.தி.மு.க-வில் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களுக்குள்தான் போட்டியிடுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ., சண்முகநாதன், தன் ஆதரவாளர்களுடன் வங்கி அலுவலகத்துக்குள் புகுந்து, வேட்புமனுக்கள், இறுதிப்பட்டியல் தயார்செய்த வேட்பு மனுக்கள், வெள்ளைத்தாள் வரை அனைத்தையும் கிழித்துப் போட்டுள்ளார். தேர்தல் அதிகாரியையும் மிரட்டிச்சென்றுள்ளனர். ஒரே கட்சியில் இருந்துகொண்டு இப்படிச் செய்தது நியாயமா?” என்றார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக இரவு வரை பதற்றமான சூழ்நிலை உருவானது. தேர்தலை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தேர்தல் அதிகாரி காளிராஜ் கையெழுத்திட்ட அறிவிப்பு நோட்டீஸ் வங்கி அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டது. இதையடுத்து, வங்கி முன்பு திரண்டிருந்த அ.தி.மு.க-வினர் கலைந்து சென்றனர்.

ஏற்கெனவே கடந்த மே 2-ம் தேதி சட்டம் ஒழுங்குப் பிரச்னை காரணமாகத் தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது முறையாக மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வே விண்ணப்பப் படிவங்களை கிழித்துப்போட்டதாகக் குற்றம் சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க