வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (14/08/2018)

கடைசி தொடர்பு:09:50 (14/08/2018)

”அரசியலில் காமராசர், கக்கன் மாதிரி உதாரணம் காட்டக்கூட இப்போது ஆள் இல்லை” -நடிகர் பார்த்திபன் வேதனை

"காமராஜர், கக்கன் மாதிரி உதாரணம் காட்டக்கூட இப்போதைய அரசியலில் யாருமில்லை” என ஈரோட்டில் நடைபெற்ற புத்தகத் திருவிழா நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேசினார்.

பார்த்திபன்

ஈரோட்டில், 'மக்கள் சிந்தனைப் பேரவை' என்னும் அமைப்பு சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது. அதன் தொடர்ச்சியாக 14-வது ஈரோடு புத்தகத் திருவிழா, கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. மக்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிவருகின்றனர். புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக, தினமும் ஒரு குறிப்பிட்ட தலைப்புகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் உரையாற்றிவருகின்றனர். அந்த வகையில், ஆகஸ்ட் 13-ம் தேதி (நேற்று) நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘சினிமாயணம்’ என்ற தலைப்பில் நடிகர் பார்த்திபன் பேசினார்.

பார்த்திபன்

அவர், “ 'புதிய பாதை' படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைச்சது. அந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை. அந்த தேசிய விருதை நான் சாதாரணமாக கையில வாங்கிட்டு வந்துட்டேன். ஆனா, அதுக்கப்புறமா 10 வருஷம் கழிச்சி 'ஹவுஸ்ஃபுல்' என்ற  படத்துக்குதான் எனக்கு தேசிய விருது கிடைச்சது. அப்போதான் உழைப்பும், அதற்குக் கிடைக்கிற அங்கீகாரமும் எவ்வளவு முக்கியம் என எனக்குப் புரிந்தது. என்னுடைய அப்பாவுக்கு என் மேல ஒரு நம்பிக்கை வந்துடணும்னு தான்நான் சினிமாவுக்கு வந்தேன். வித்தியாசமான கோணத்துல எந்த ஒரு விஷயத்தையும் அணுகிய நான், வாழ்க்கையில் பல பாடங்களைக் கத்துக்கிட்டேன். சினிமாவில் நான் நிறைய சம்பாதிச்சிருக்கேன். அதேமாதிரி நிறைய இழந்திருக்கேன். ஆனா, நான் கத்துக்கிட்ட ஒரே பாடம், ‘கடைசி காலத்துல படுக்க ஆறு அடி இடம் கிடைச்சா போதும்’ங்கிறதுதான். ஆனா, அதுக்கே சமீபத்துல எவ்ளோ பிரச்னை வந்துச்சினு நீங்களே பார்த்திருப்பீங்க.

நான் எந்த விஷயத்தையும் தயங்கித் தயங்கி பேசமாட்டேன். எந்தப் பிரச்னை வந்தாலும் பரவாயில்லைனு என்னோட மனசுல பட்டதைப் பேசிடுவேன். அந்த வகையில், கடற்கரையில் தலைவர்களுக்கு சிலை வைப்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. 50 வருஷம் கழிச்சி இளைஞர்கள் எல்லாம் கலாம் ஐயா சமாதியைத்தான் தேடிப் போவாங்க. அப்படித்தான் இருக்கணுமே தவிர, இந்த இடத்துலதான் இன்னாருடைய சமாதி இருக்கு. அதனால இவங்களையும் பார்த்துட்டு போகலாம்னு இருக்கக் கூடாது. எல்லா சமாதியும் மல்ட்டிபிளெக்ஸ், காம்ப்ளக்ஸ் மாதிரி ஒரே இடத்துல இருக்கணும்னு அவசியம் இல்லை. மக்கள், தலைவர்களோட சமாதியை தேடித்தான் போகணும்” என அதிரடித்தார். 

பார்த்திபன்

“இன்னைக்கு சினிமாவோட அரசியல்லதான் நிறைய சம்பாதிக்கலாம். என்கிட்ட இப்போ 60 ஸ்கிரிப்ட் இருக்கு. ஆனா, அதைத் தயாரிக்க என்கிட்ட பணம் இல்லை. நாளைக்கு நான் அரசியலுக்கு வர்றேன்னா, என்னோட படத்துக்காக 100 கோடி தர தயாராக இருக்காங்க. இன்றைக்கு உள்ள சூழ்நிலையில், அரசியலில் காமராசர், கக்கன் மாதிரி உதாரணம் காட்டக்கூட ஆள் இல்லை. மக்களுக்காக சேவை செய்பவர்கள், தன்னலம் பார்க்காமல் சமுதாயப் பங்களிப்போடு அரசியல்செய்ய வேண்டும்” என்றார்.