மு.க.ஸ்டாலினை தலைவர் கருணாநிதியாகத்தான் பார்க்கிறோம்..! செயற்குழு கூட்டத்தில் ஜெ.அன்பழகன் #liveupdates

இரங்கல் தீர்மானத்துக்குப் பிறகு பேசிய ஜெ.அன்பழகன், 'தற்போதைய சூழலில் தி.மு.க-வினர் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும். இந்திய அரசியலில் அவர், அனைவருக்கும் கலங்கரை விளக்கமாக உள்ளார். 13 முறை, வெற்றி பெற்ற கருணாநிதி, 14-வது முறையாக மெரினாவுக்காகப் போட்டிபோட்டு வெற்றிபெற்றார்.

கருணாநிதிக்கு யாரெல்லாம் நமக்கு மெரினாவில் இடமில்லை என்றார்களோ, அவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்ற சூழலை உருவாக்க வேண்டும். செயல் தலைவராக இருந்தாலும், மு.க.ஸ்டாலினை  தலைவராகத்தான் பார்க்கிறோம். தலைவர் கருணாநிதியாகத் தான் பார்க்கிறோம்' என்று தெரிவித்தார்.

கருணாநிதிக்கான இரங்கல் தீர்மானத்தை டி.கே.எஸ்.இளங்கோவன் வாசித்து முடித்தார். அதன்பிறகு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கருணாநிதிக்கு மரியாதைசெலுத்தினர்.

தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானமாக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை டி.கே.எஸ் இளங்கோவன் வாசித்தார். இரங்கல் தீர்மானத்தில், 'பொது வாழ்வில் ஈடுபடக்கூடியவர்கள் பார்த்து, படித்து கற்றுக் கொள்ளக்கூடிய பல்கலைக்கழகமாக இருந்தவர் கருணாநிதி. தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

ஏற்றத்தாழ்வைப் போக்கி, சமத்துவத்தை உருவாக்குவதற்கு மாநிலம் முழுவதும் சமத்துவபுரம் அமைத்தவர் கருணாநிதி. பெரியாரின் விருப்பப்படி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றினார். கருத்துச் சுதந்திரத்துக்காக, ஆட்சியை இழந்தவர். மாநில சுயாட்சிக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர். சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் கொடி ஏற்றுவதற்கான உரிமையைப் பெற்றுத்தந்தவர் கருணாநிதி. அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரவித்துகொள்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தார். 

பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்க நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி. உள்ளாட்சி அமைப்புகளில் 33  சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி. கிராமங்களில் நீடித்த, நிலையான வளர்ச்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி. மெட்ராஸ் என்பதை சென்னை என்று தமிழில் மாற்றியவர். இதழியல் மற்றும் எழுத்துத்துறைக்கு கருணாநிதியின் பங்கு அளப்பறியது. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் தி.மு.க செயற்குழுக் கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகைதந்துள்ளார். 

 

தி.மு.க செயற்குழுக் கூட்டத்துக்கு காரில் வருகை தந்த கனிமொழி

தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். அவருடைய இறப்பைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் பதவி காலியாக உள்ளது. விரைவில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தி, தி.மு.க தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று தி.மு.க செயற்குழுக் கூட்டம் தொடங்கியது.

அந்தக் கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வருகைதந்தனர். அதில் பலர், கறுப்புச்சட்டை அணிந்து வந்தனர். கட்சி ரீதியான 65 மாவட்டங்களிலிருந்து தலா 3 பேர் வருகைதந்துள்ளனர். அழகிரிக்கு ஆதரவாக நிர்வாகிகள் யாரும் இல்லாததால், அழகிரியின் கருத்து எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது என்றே கூறப்படுகிறது. செயற்குழுக் கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில், பெரியார், அண்ணா, கருணாநிதி படங்களை அடுத்து மு.க.ஸ்டாலின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!