வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (14/08/2018)

கடைசி தொடர்பு:12:50 (15/08/2018)

அண்ணா பல்கலையில் குறுக்குவழியில் இன்ஜினீயரிங் மாணவர்கள்! - அம்பலப்படுத்திய ஆர்டிஐ

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், குறுக்குவழியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின்மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. மறுகூட்டல், மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடித்தல் என ஊழல் பட்டியல் நீள்கிறது.  கடந்த 2017-ம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையிலும் முறைகேடு நடந்துள்ளதாகப் புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, பணத்துக்கு சீட்டுகள் விற்கப்பட்டுள்ளதாகவும் சொல்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், கடந்த 17.10.2017ல் ஆர்டிஜ மூலம் 15 கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு பல்கலைக்கழகம் சார்பில் சில கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் படிப்பில் 39 மாணவ, மாணவிகளும் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படிப்பில் 13 மாணவ, மாணவிகளும் மைனிங் துறையில் 4 மாணவ, மாணவிகளும் மேனுஃபேக்சரிங் துறையில் 8 பேரும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படவில்லை. 

இதுகுறித்து பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் பேசினோம். ``கடந்த 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடந்தபோது, மருத்துவப்  படிப்புக்கான நீட் தேர்வு விவகாரக் குளறுபடி இருந்தது. இதனால், மருத்துவப் படிப்புக்குக் காத்திருந்த சில மாணவ, மாணவிகள் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தனர். நீட் தேர்வு குளறுபடி முடிந்தபிறகு, இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்த சிலருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது. இதனால், அவர்கள் இன்ஜினீயரிங் படிப்பை விட்டுவிட்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். அத்தகைய மாணவர்களின் இடங்கள் காலியாக இருந்தன. இவ்வாறு காலியான இடங்களுக்கு மீண்டும் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படாது. ஆனால் சிலர், இந்த இடங்களையும் நிரப்பியுள்ளனர். அதில் முன்எச்சரிக்கையாக கோட்டா இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நிரப்பியதாகப் பல்கலைக்கழகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இது முறைகேடாகும். இதுதொடர்பாக ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டால் அதற்கும் சரியான பதிலளிக்கப்படவில்லை. 

இந்த நிலையில்தான், 4 துறைகளில் உள்ள மாணவ, மாணவிகளின் பட்டியலை மட்டும் ஆர்டிஐ-யில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரித்தால், குறுக்குவழியில் மாணவர்கள் சேர்ந்ததைக் கண்டுபிடித்துவிடலாம். ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள்மீது துணைவேந்தர் சூரப்பா கடும் நடவடிக்கை எடுத்துவருகிறார். மாணவர்களின் சேர்க்கைக்கான பட்டியலையும் வெள்ள அறிக்கையாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டால், குறைந்த மதிப்பெண்கள் பெற்று குறுக்குவழியில் இன்ஜினீயரிங் சேர்ந்த மாணவர்களின் விவரங்களைக் கண்டறிந்துவிடலாம். மேலும், முதலாமாண்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது. எனவே, மாணவர்களின் சேர்க்கையில் நடந்த முறைகேடுகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றனர். 

இதுகுறித்து விளக்கம் கேட்க துணைவேந்தர் சூரப்பாவைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. தொடர்ந்து பெயரைக் குறிப்பிட விரும்பாத பல்கலைக்கழக உயரதிகாரி ஒருவர், கோட்டா அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் சேர்க்கையில் எந்தவித முறைகேடுகளும் நடக்கவில்லை என்றார். 

 எவ்வளவு தொகை?

அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் சேர்க்கையில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற சுமார் 100 மாணவர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கொடுத்து சீட் வாங்கியுள்ளதாகத் தகவல் உள்ளது. அதிலும் டிமாண்ட் உள்ள துறைகளுக்கு 25 லட்சம் வரை பேரம் பேசப்பட்டுள்ளது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.