வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (14/08/2018)

கடைசி தொடர்பு:14:42 (14/08/2018)

`ஜெயலலிதா இருந்தபோது இப்படிப் பேசியிருப்பாரா?'- ரஜினியைச் சாடும் ஜெயக்குமார்

`எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இருந்தபோது ரஜினி இப்படிப் பேசியிருப்பாரா... தமிழகத்தில் அவர் நடமாட முடியுமா' எனக் கடுமையாக ரஜினியை விமர்சித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். 

ஜெயக்குமார்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், நடிகர் சங்கம் சார்பில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகளும், ரஜினி, விஷால் உள்ளிட்ட நடிகர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, கருணாநிதி நல்லடக்கம் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காததுகுறித்து விமர்சித்துப் பேசினார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் ரஜினிகாந்த் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்துப்பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''பார்ட் டைம் அரசியல் வாதியாக உள்ள ரஜினி, முழுநேர அரசியல்வாதியாக முயன்றுவருகிறார். நினைவேந்தல் நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது முறையல்ல. ஆனால், அந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை ரஜினி விமர்சித்துப் பேசியிருக்கிறார். ரஜினிக்கு அரசியலில் முதிர்ச்சி இல்லை. அரசியல் வரலாறு தெரியாமல் ரஜினி பேசிவருகிறார். ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகிவிட்டது. எம்.ஜி.ஆரும்  ஜெயலலிதாவும் இருந்தபோது ரஜினி இப்படிப் பேசியிருப்பாரா. தமிழகத்தில் அவர் நடமாட முடியுமா? ரஜினியின் கோழைத்தனம் இது. அவரது செயல், சந்தர்ப்பவாதத்தைக் காட்டுகிறது. மறைந்த தலைவருக்கு அனைத்து மரியாதையையும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது'' என்றார்.