வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (14/08/2018)

கடைசி தொடர்பு:13:55 (14/08/2018)

எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம்; தலைவராகப்போகும் தலைவர்..! கருணாநிதி குறித்த துரைமுருகன் நினைவுகள்

'கருணாநிதி மண்ணை விட்டுச் சென்றாலும் நம்மை வழிநடத்த ஒளிக்கீற்றாய் மு.க.ஸ்டாலின் உள்ளார்' என்று தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்குப் பிறகு, கருணாநிதியின் நினைவுகள்குறித்து தி.மு.க வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர், 'எனக்கு, இதய அறுவைசிகிச்சை செய்ய இருந்த நேரத்தில், மிகுந்த அச்சத்துடன் இருந்தேன். அந்த பயத்தை அவர்தான் போக்கினார். சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என்று கருணாதி அடிக்கடி சொல்வார். பொதுவாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் கலைஞர்.

கருணாநிதி, தேசியத் தலைவராக அறியப்படுகிறார். அவர், உலகத் தலைவர். உலக அளவில் ஐந்து கட்சிகளுக்குதான், 50 ஆண்டுகளைத் தாண்டிய பாரம்பர்யம் உள்ளது. அதில், நமது தி.மு.க-வும் ஒன்று. 60 ஆண்டுகளைத் தாண்டிய ஒரு கட்யியில், 50 ஆண்டுகளாகத் தலைவராக இருந்தது ஒரு மாபெரும் சாதனை. எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க சென்னை பல்கலைக்கழகம் முடிவு எடுத்திருந்தது. நான் அப்போது சிண்டிகேட் உறுப்பினராக இருந்தேன். சிண்டிகேட் உறுப்பினர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தாலும், டாக்டர் பட்டம் கொடுக்க முடியாது. நான், எதிர்ப்பு தெரிவிப்பேன் என்று நினைத்த பல்கலைக்கழக நிர்வாகம், சிண்டிகேட் கூட்டம் கூட்டவில்லை. பட்டம் அளிக்கும் நாளன்று அவசர அவசரமாக சிண்டிகேட் கூட்டம் கூட்டினார்கள்.

நான், இதுகுறித்து கருணாநிதியிடம் சொன்னேன். அதற்கு கருணாநிதி, 'எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்க்கக் கூடாது. அவர், உனக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளார். துணை நடிகர் அளவிலிருந்து எம்.ஜி.ஆர் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளார். அவர், இந்த டாக்டர் பட்டத்துக்கு தகுதியானவர். நீயே, டாக்டர் பட்டம் வழங்குவதற்கு முன்மொழிய வேண்டும் என்றார்'. கருணாநிதி என்னிடம் கூறியதைக் கேட்டு எம்.ஜி.ஆர் மகிழ்ந்தார். கருணாநிதி நம்மை வழிநடத்த மு.க.ஸ்டாலின் என்ற ஆலம் விழுதை விட்டுச்சென்றுள்ளார். கருணாநிதி மண்ணைவிட்டுச் சென்றாலும், மு.க.ஸ்டாலின் என்ற ஒளிக்கீற்று நம்மை வழிநடத்தும். தலைவராகப்போகிற தலைவரே உங்கள் வழியில் நடப்போம்' என்று துரைமுருகன் கூறிய பிறகு எழுந்த கரவொலி அடங்குவதற்கு இரண்டு நிமிடம் ஆனது.