அழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை! | Stalin discussion with family members ahead of azhagiri move

வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (14/08/2018)

கடைசி தொடர்பு:12:50 (15/08/2018)

அழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை!

ஸ்டாலின்  அழகிரி

 அழகிரியை தி.மு.க-வில் சேர்ப்பது தொடர்பாக குடும்பத்தினருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, அங்கு இருந்த மூத்த நிர்வாகிகள் ஆறுபேர், 'அழகிரியை கட்சியில் சேர்க்கக் கூடாது' என்று  போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

கருணாநிதி மறைவுக்குப் பிறகு, கோபாலபுரத்திலும் அறிவாலயத்திலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கருணாநிதி சமாதிக்கு குடும்பத்தினருடன் வந்த அழகிரி, தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது அறிவாலயம், கோபாலபுரம், சி.ஐ.டி.காலனி ஆகிய இடங்களில்  களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 இந்த நிலையில், தி.மு.க-வின் அவரச செயற்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில், கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருணாநிதி நினைவலைகளைக் கட்சியின் மூத்த தலைவர்கள் கண்ணீர் மல்க நினைவுகூர்ந்தனர். கூட்ட நிகழ்ச்சியை சென்னையில் தங்கியிருக்கும் அழகிரியும் அவரின் ஆதரவாளர்களும் கவனித்துவந்தனர். 

 கருணாநிதியின் சமாதியில் அழகிரி பேசிய பேச்சுகுறித்து கோபாலபுரத்தில் மீண்டும் குடும்ப உறுப்பினர்கள் ஆலோசித்துள்ளனர். அப்போது, குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமையில்லை என்றால் அது, தி.மு.க-வை கண்டிப்பாக பாதிக்கும் என்பதே அனைவரும் வலியுறுத்தியுள்ளனர். அதை ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அமைதியாகக் கேட்டனர். இந்தச் சமயத்தில், மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆறுபேர், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

 அழகிரி

இதுகுறித்து நம்மிடம் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகிகள், ``தலைவர் கருணாநிதிதான் அழகிரியை கட்சியிலிருந்து கடந்த 2014ல் நீக்கினார். நான்கு ஆண்டுகளாக அவரும் அவரின் ஆதரவாளர்களும் அமைதியாகத்தான் இருந்தார்கள். கருணாநிதி மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வில் அதிகாரத்தைச் செலுத்த அவர்கள் துடிப்பது ஏன் என்ற கேள்வியை கட்சியின் மூத்த நிர்வாகிகள் கேட்டதற்கு, எந்தவித பதிலும் இல்லை. அழகிரி கட்சியில் சேர்க்கப்பட்டால் மீண்டும் தி.மு.க.வில் பிரளயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதோடு, எதிர்க்கட்சிகள் தி.மு.க-வை குடும்பக் கட்சி என்று முத்திரை குத்திவிடுவார்கள். அதையெல்லாம் பொதுச் செயலாளரும் செயல் தலைவரும் விரும்பவில்லை. கருணாநிதி எடுத்த முடிவை மாற்றுவதை ஓட்டு மொத்த உடன்பிறப்புக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பது கேள்விகுறிதான்" என்றனர். 

 அழகிரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆறு பேர்களில் சிலர், மாற்றுக்கட்சியிலிருந்து தி.மு.க-வுக்கு வந்தவர்களாம். அவர்களில் ஒருவர், தீபம் ஏற்றும் ஊருக்குச் சொந்தக்காரர். மற்றவர்கள், வடமாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர், தென்மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் என ஆறுபேர்தான் அழகிரிக்கு தொடர்ந்து போர்கொடி தூக்கிவருகின்றனர்.