`10 ஆண்டு காதல்... வேலை கிடைத்தவுடன் உதறினார்' - காதலனால் ஆசிரியைக்கு நடுரோட்டில் நடந்த துயரம்! | Women break up with her ten years boy friend

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (14/08/2018)

கடைசி தொடர்பு:15:45 (14/08/2018)

`10 ஆண்டு காதல்... வேலை கிடைத்தவுடன் உதறினார்' - காதலனால் ஆசிரியைக்கு நடுரோட்டில் நடந்த துயரம்!

10 ஆண்டுகளாக காதலித்து வந்த காதலி, ஆசிரியை வேலைக்கிடைத்தவுடன் காதலனுடன் பேசுவதை தவிர்த்துவந்தார். இதனால் ஆவேசமடைந்த காதலன், நடுரோட்டில் காதலியை குத்திக்கொன்றார். இந்த சம்பவம் அரியலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட ஆசிரியை

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமர்நிஷா. இவர் அரியலூர் அருகே இலந்தங்குழி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வழக்கம்போல் இன்று இவர் பள்ளிக்குச் செல்வதற்காக அல்லிநகரம் கிராமத்திலிருந்து இருசக்கரவாகனத்தில் இலந்தங்குழி கிராமத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். தொண்டப்பாடி வளைவில் செல்லும்போது இவரின் பின்னால் வந்த இரண்டு மர்மநபர்கள் கமர்நிஷாவை மறித்து கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனர். உயிருக்குப் போராடிய கமர்நிஷாவை பொதுமக்கள் அரியலூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே கமர்நிஷா உயிரிழந்தார். இது குறித்து குன்னம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஆசிரியை

வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினரிடம் பேசியபோது, ``கமர்நிஷாவும் ஆனந்தும் பத்து வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனந்த் ஐ.டி.ஐ முடித்துவிட்டு பெரம்பலூரில் பேட்ரி கடை நடத்தி வருகிறார். கமர்நிஷாவின் படிப்புக்கு மட்டுமில்லாமல் வேலை கிடைக்கவும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஆனால், ஆசிரியர் வேலை கிடைத்த உடன் பள்ளியில் உள்ள சிலரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்திடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டுள்ளார். இந்த விஷயம் ஆனந்துக்கு தெரியவர பலமுறை கமர்நிஷாவிடம் போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது, ஆனந்தின் குடும்பத்தைப் பற்றியும் அவர் நடத்தைப் பற்றியும் தவறாக பேசியிருக்கிறார். இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், கமர்நிஷாவை கழுத்தில் குத்திக் கொலை செய்திருக்கிறார். இருவரையும் பிடித்துவிட்டோம். விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. பிறகு பேசுகிறோம்" என்று முடித்துக்கொண்டனர்.