`லஞ்சம் கொடுக்காமல் சென்னை மாநகராட்சியில் எந்தச் சான்றிதழும் வாங்க முடியவில்லை’ - நீதிபதி வேதனை!

லஞ்சம் கொடுக்காமல் சென்னை மாநகராட்சியில் இருந்து எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை, சென்னை மக்களை விரக்திக்கு ஆளாக்கியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

நீதிபதி

சென்னை ஷெனாய் நகர் பகுதியில் தன் வீட்டின் முன்புறம் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அகற்றக்கோரி லட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜரானார். மாநகராட்சி எல்லைக்குள் சட்டவிரோத கட்டுமானங்கள், முறைகேடுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பட்டியலிட்டார். மாநகராட்சி நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, `சட்ட விரோத கட்டுமானங்களைத் தடுக்க மாநகராட்சி எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது சென்னை மக்களை விரக்தி அடையச் செய்துள்ளது’ என்றார். மேலும், இது தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய நீதிபதி, மாநகராட்சி எல்லைக்குள் விதிகளைப் பின்பற்றி கட்டட ஒப்புதல்கள் வழங்கப்படுகிறதா, சட்ட விரோத கட்டுமானங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பதிலளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

 

மாநகராட்சி

தொடர்ந்து பேசிய நீதிபதி, `ஊழல் நடவடிக்கைகள் மலிந்து விட்டன. ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மாநகராட்சி அதிகாரிகள் சொத்து விவரங்கள், ஊழலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள், மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு பிரிவின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். லஞ்சம் கொடுக்காமல் கட்டட ஒப்புதல் உள்ளிட்ட எந்தச் சான்றிதழும் பெற முடியாத நிலை உள்ளதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். நிலுவையில் உள்ள சொத்துவரியை வசூலிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பதாக லோக் அதாலத் ஆய்வுக் கூட்டத்தில்  உத்தரவாதம் அளித்தும், எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காத அதிகாரிகள் மீது மாநகராட்சி ஆணையர் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளார்’ எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!