வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (14/08/2018)

கடைசி தொடர்பு:18:15 (14/08/2018)

புலிகள் சரணாலயம் விரிவாக்கத்துக்கு எதிராகப் போராட்டம் அறிவித்தது பா.ஜ.க!

ளக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தை கன்னியாகுமரி மாவட்ட வனத்தில் விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு எதிராக பா.ஜ.க. போராட்டம் அறிவித்துள்ளது.

முத்துகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவர் முத்துகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கன்னியாகுமரி மாவட்ட மலைக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களும் விவசாயிகளும் காட்டுவிலங்குகளால் பாதிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. மத்தியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது கன்னியாகுமரி மாவட்டத்தில் புலிகள் சரணாலயம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி அளித்தது. இதையடுத்து தமிழக அரசு 13.8.2012 அன்று புலிகள் சரணாலயத்துக்கான அரசாணை வெளியிட்டது. ஆறுகாணி முதல் ஆரல்வாய்மொழிவரை வனப்பகுதிகளை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயம் அமைந்தால் 48 மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன். விவசாயம் பாதிக்கப்படும். புலிகள் சரணாலயம் அமைப்பதற்காக மும்முரப் பணிகள் இப்போது நடந்துவருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே, குமரி மாவட்ட பா.ஜ.க சார்பில் வரும் 21-ம் தேதி குலசேகரம் ஜங்ஷனில் மறியல் போராட்டம் நடத்துகிறோம். இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்கிறார்கள். தமிழக அரசு ஆணையை வாபஸ் பெற்று புலிகள் சரணாலயம் அமைப்பதைக் கைவிட வேண்டும்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவந்திருக்கிறார். தேசிய நெடுஞ்சாலை மற்றும் 124 மாநில சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ரூ.9 கோடியில் சுசீந்திரம் ஆற்றுப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2,500 கோடியில் நான்கு வழிச்சாலை, ரூ.4,000 கோடியில் மதுரை முதல் கன்னியாகுமரி, கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை இரட்டை மின் ரயில் பாதை, ரூ.28,000 கோடியில் குமரி மக்களின் நீண்டநாள் கனவுத் திட்டமான சர்வதேச வர்த்தக துறைமுகம் ஆகிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம், பார்வதிபுரத்தில் அமைக்கப்படும் மேம்பாலம் 2 மாதத்தில் திறக்கப்பட உள்ளது. மத்திய அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல குமரி மாவட்டத்தில் 400 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2019 தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறோம்" என்றார்.