அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு; டிஜிட்டல் கல்வி! - அசத்தும் தலைமையாசிரியர்

அரசுப் பள்ளி மாணவர்கள்

மாணவர்கள் எதிர்காலத்தை நோக்கிச் செல்வதற்கு டிஜிட்டல் கல்வி அவசியம். அதை தொடக்கப் பள்ளியில் இருந்தே கற்றுத்தர வேண்டும் என தன் முயற்சியால் மாணவர்களுக்கு டிஜிட்டல் வகுப்புகளை தலைமையாசிரியர் வழங்குகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சில மாதங்களுக்கு முன்னர் தலைமை ஆசிரியராக கோ.ஜெயக்குமார் ஞானராஜ் பொறுப்பேற்றார். மாணவர்களை ஊக்கப்படுத்தவும் அவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார். தற்காப்பு பயிற்சிகளும் கதை, ஓவியம் என்று மாணவர்கள் மத்தியில் கொண்டுசென்றுவருகிறார். இந்த நிலையில், தற்போது பாடங்களையும் கணினி மூலம் டிஜிட்டல் முறையில் கற்றுத்தர ஏற்பாடு செய்துள்ளார். இதன்படி மாணவர்களுக்குத் தேவையான முதல் வகுப்பு பாடங்கள் க்யூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் ஆவணங்களாக சேகரித்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் பாடங்களை வழங்குகிறார். மேலும், யூடியூப்பிலிருந்து தேவைப்படும் பாடங்கள் பதிவிறக்கம் செய்தும் மாணவர்களுக்கு புரஜெக்டர் மூலம் திரையிட்டுக் காட்டி மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வியைக் கற்பிக்கிறார்.

இது குறித்து தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ்  கூறுகையில், ``மாணவர்கள் பாடப் புத்தகங்களைப் பார்த்துப் படிப்பதைவிட, திரையில் பாடங்களைப் பார்ப்பதன் மூலம் எளிதில் ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறார்கள். மேலும் திருக்குறள், கடவுள் வாழ்த்து உள்ளிட்ட பாடல்களை ராகத்துடன் எளிதில் கற்றுக்கொள்கிறார்கள். ஆங்கில உச்சரிப்பு மிகவும் தெளிவாக வருகிறது. முதல் இரு வகுப்புக் குழந்தைகள் இதன் மூலம் ஏராளமான பாடல்களை கற்றுக் கொள்கிறார்கள். மாணவர்களுக்குத் தேவையான பாடம் தொடர்பான விளக்கங்கள், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது'' எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!