வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (14/08/2018)

கடைசி தொடர்பு:19:23 (14/08/2018)

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்!

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்!

தமிழக அரசியல் கட்சிகள், நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கிவிட்டன. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான தொடர் போராட்டங்களைத் தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் அவ்வப்போது நடத்திவருகின்றன. பொதுமக்களின் அடிப்படைப் பிரச்னைகளை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சிகள், மாவட்டம்தோறும் தொடர் போராடங்களை அறிவித்து நடத்தி வருகின்றன. நாடாளுமன்றத் தொகுதிவாரியாக, அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தங்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும், தன் சுற்றுப்பயணத்தின்போது அந்தந்த ஊர்களில் செயல்வீர்கள் கூட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார். சென்னையில் கடந்த 12-ம் தேதி, நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை தினகரன் நடத்தி முடித்துள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம், வரும் 20-ம் தேதி நடத்தப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி 29-ம் தேதியிலிருந்து அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை, புதுப்பித்தல் பணிகள் தொடங்கி நடைபெற்றன. அப்போது சுமார் இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜெயலலிதா காலத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, புதுப்பித்தல் பணிகள் அனைத்தையும் ஒரு மாத காலத்துக்குள் முடித்துவிடுவார். ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் இந்த விஷயத்தில் ஜெயலலிதா சமரசம் செய்துகொண்டதே கிடையாது. ஆனால், இப்போது எட்டு மாதங்களாக கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். 

அ தி மு க, எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையே, அ.தி.மு.க தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவை நீக்கி, கடந்த 2017 செப்டம்பர் 12-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தப் பொதுக்குழுவில், ''அ.தி.மு.க-வில் இனி பொதுச் செயலாளர் என்ற பதவியே கிடையாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்படுகிறது'' என்று தீர்மானம் போட்டார்கள். எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியின் அடிப்படை விதிகளை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. 'அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர்களால்தான், கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்' என்று அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, இந்திய தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு பல்வேறு கட்டங்களைத் தாண்டி, பல மாதங்களாகத் தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் உள்ளது. 

`இந்த வழக்கு விசாரணையை விரைவாக முடித்து தீர்ப்புச் சொல்ல வேண்டும்' என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ''நான்கு வாரத்துக்குள் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி தொடர்பான மனுவை விசாரித்து தீர்ப்புச் சொல்ல வேண்டும்" என்று கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. எனவே, அ.தி.மு.க தொடர்பான வழக்கு டெல்லியில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஏற்கெனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, தேர்தல் ஆணையத்தில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், ''ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை. அது பரிசீலனையில் உள்ளது'' என்று தெரிவித்தது. 

எனவே, "கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுக்கு தேர்தல் ஆணையத்தால் இன்னமும் சட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே, பொதுச் செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையத்துக்கு எழுத்துபூர்வமாகப் பதில்சொல்ல வேண்டிய நெருக்கடி அ.தி.மு.க-வுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் 20-ம் தேதி நடக்கும் கட்சியின் செயற்குழுவில் இதுபற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட இருக்கிறது" என்கிறார்கள் அக்கட்சியின் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.

கே.சி.பழனிசாமி

இந்தச் செயற்குழுவை அடுத்து, பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தவும் அ.தி.மு.க தலைமை முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில், ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியைக் காலி செய்துவிட்டு, பொதுச் செயலாளர் நியமனத்தைச் செய்து, அதற்கான தீர்மானத்தைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கும் திட்டமும் உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதன்படி, பொதுச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியையும் நியமிக்க ஆலோசனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்களைச் செய்யவில்லை என்றால் அ.தி.மு.க கட்சியையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்ய ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று தீர்மானம் போட்டவர்கள், இப்போது தலைகீழ் மாற்றத்துக்குத் தயாராகி வருகிறார்கள்..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்