`இந்த நிலை தொடர்ந்தால் பஞ்சம்தான்'- எச்சரிக்கும் ஜி.கே.மணி

ஜி கே மணி

``தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் விவசாயம் முற்றிலும் அழிந்து பஞ்சம் தலைவிரித்தாடும்" என்று பா.ம.க தலைவர் ஜி.கே மணி எச்சரித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழ்நாட்டில் அன்புமணி தலைமையில் கூட்டணி அமைக்க வந்தால் ஏற்றுக்கொள்வோம். இரண்டு தேர்தலையும் சந்திக்க பா.ம.க தயாராக உள்ளது. மழையால் கேரள மாநிலத்தில் 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. 187 உயிரிழப்பு மற்றும் 8 ஆயிரம் கோடிக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களுக்கு தண்ணீர்தான் ஆதாரமாக விளங்குகிற நிலையில், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் விவசாயம் முற்றிலும் அழிந்து பஞ்சம் தலைவிரித்தாடும்.

கேரளாவில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது. தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை திட்டம் சரியாக இல்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 40 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. சேகரிப்பு, பராமரிப்பு, பயன்பாடு என்பது அவசியம். செப்டம்பரில் 1, 2 ஆகிய தேதிகளில் `வைகை காப்போம் விழிப்பு உணர்வு கொள்வோம்' என்ற தலைப்பில் வைகையிலிருந்து ராமநாதபுரம் வரை அரசு நீர் மேலாண்மை செய்ய வேண்டும் என்றும் மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் அன்புமணி தலைமையில் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளோம். இந்த  பிரசாரத்தால் மக்களுக்கு எந்த இடையூறும் இருக்காது. அனைவரும் மழைநீரை முறையாக சேமிக்க வேண்டும். தமிழ்நாட்டில் விளைநிலம் பாசனம் செய்யும் நிலப்பரப்பு குறைந்துவிட்டது'' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!