வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (14/08/2018)

கடைசி தொடர்பு:18:26 (14/08/2018)

`திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல்

1979: முரசொலி பத்திரிகையின் மதுரைக் கிளையைப் பார்த்துக் கொள்வதற்காக மு.க அழகிரி சென்னையிலிருந்து மதுரைக்குக் குடும்பத்துடன் வந்தார். அங்கே வாடகை வீட்டில் தங்கியிருந்த அழகிரி தினமும் ஸ்கூட்டரில்தான் அலுவலத்துக்கு போவதும் வருவதுமாக இருந்தார்.

`திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடந்த 2014-ம் ஆண்டு தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டதால் கட்சியிலிருந்தும், அரசியலில் இருந்தும் ஒதுங்கியிருந்தார். இப்போது  கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மீண்டும் அரசியலில் குதிப்பார் என்கிற சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. அழகிரி சமாதிக்கு வருகிறார் எனத் தெரிந்ததும் ஊடகங்கள் பரபரத்தன. "தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம்தான் இருக்கிறார்கள்" என்றதும் இன்னுமொரு தர்மயுத்தத்தைக் காண தமிழக மக்கள் தயார்நிலைக்கு வந்துவிட்டார்கள்.

மேற்கொண்டு அழகிரி என்ன மாதிரியான அறிக்கைகள் விட இருக்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் இந்தத் தர்மயுத்தத்தின் பரிமாணங்களைப் பார்க்க முடியும். அதற்கு முன்பு அழகிரியின் அரசியல் பயணத்தைப் பார்ப்போம். திருமணமான ஐந்து வருடங்களில் சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்றதிலிருந்து நேற்று கருணாநிதிக்கு மெரினாவில் அஞ்சலி செலுத்திவிட்டு பேட்டிக் கொடுத்தவரை அழகிரி பற்றிய ஒரு டைம் ட்ராவலுக்குப் போய் வருவோம்.

1979: 'முரசொலி' பத்திரிகையின் மதுரைக் கிளையைப் பார்த்துக்கொள்வதற்காக மு.க அழகிரி சென்னையிலிருந்து மதுரைக்குக் குடும்பத்துடன் சென்றார். அங்கே வாடகை வீட்டில் குடும்பம் நடத்தியவர் தினமும் ஸ்கூட்டரில்தான் அலுவலகத்துக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். 

1980: நினைத்ததுபோல 'முரசொலி'யை மதுரையில் நிர்வகிக்கச் செய்ய முடியவில்லை என்பதால், தன் குடும்பத்துடன் மீண்டும் சென்னைக்கே வந்தார். 

1981: மீண்டும் சென்னை பிடிபடாததால், அழகிரி மதுரைக்கே சென்றார். அதன்பிறகு, தி.மு.க தொடர்பான எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவில்லை. 

அழகிரி அரசியல் பயணம்

1989: தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியதும், மதுரை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையத்தில் 'ராயல் வீடியோ' என்கிற கடையைத் தொடங்கினார். 

1993: ம.தி.மு.க பொதுச் செயலாளர்  வைகோ, தி.மு.க-விலிருந்து பிரிந்து புதிய கட்சியை உருவாக்கினார். அப்போது தென் மாவட்டத்தைச் சார்ந்த தி.மு.க நிர்வாகிகள் பலர் ம.தி.மு.க-வுக்குச் செல்லத் தலைப்பட்டனர். அவர்களை இனங்கண்டு போய்ச் சந்தித்தார், அழகிரி. மேலும், அவர்கள் தி.மு.க-விலேயே இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். கட்சி சார்ந்த கவனிக்கத்தக்க அரசியல் செயல்பாடாக அழகிரி செய்த முதல்காரியம் அது. 

1996: தி.மு.க-வில் கட்சிப்பதவி எதுவும் கொடுக்கப்படவில்லை. எனினும், தன் வீட்டில் கட்சியினரைச் சந்திக்க ஆரம்பித்தார் அழகிரி. இதன்மூலம் அவர் பக்கம் தொண்டர்கள் ஒருங்கிணைய ஆரம்பித்தனர். 

1999: அழகிரிக்கும், கருணாநிதிக்கும் கட்சித் தொடர்பாக ஏற்பட்ட முதல் மனத்தாங்கல் அப்போதுதான் ஆரம்பித்தது. நிதி நிறுவன அதிபர் ஜெகதீசன் கொலை வழக்கில் கைதான மிசா பாண்டியன் மீது தி.மு.க நடவடிக்கை எடுத்தது.  மிசா பாண்டியனுக்கு ஆதரவாக அழகிரி செயல்பட்டார் எனக் கருணாநிதிக்கு தெரிய வந்ததுதான் காரணம். 

2000: மிசா பாண்டியனுக்கு ஆதரவாக அழகிரி செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவருடைய ஆதரவாளர்களால் மதுரையில் கலவரம் நடைபெற்றது. பேருந்துகள் எரிக்கப்பட்டன. 

2001: மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. தென் மாவட்டங்களில் தி.மு.க வேட்பாளர்கள் தோற்க வேண்டுமென அழகிரி செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது. அதுபோலவே,முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் உட்பட பத்துபேர் அந்தச் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்கள். அப்போதுதான் அழகிரியின் பலத்தை தி.மு.க உணர ஆரம்பித்தது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றதும், கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அந்தச் சமயத்தில் அழகிரி கட்சியின் எந்தவொரு பதவியில் இல்லையென்றாலும் அவரும் கைது செய்யப்பட்டார். மதுரைச் சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர். அந்தச் சூழலில் ஒத்திசைவு ஏற்பட அழகிரி மீண்டும் தி.மு.க-வில் சேர்க்கப்பட்டார். 

2003: தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின், ஜாமீனில் வெளிவந்தார் அழகிரி. 

2006: இந்தாண்டுதான் அழகிரியின் அரசியல் பயணத்தில் அவருக்கு பெரிய முக்கியத்துவத்தைக் கட்சியில் ஏற்படுத்தியது. அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அழகிரியின் பரிந்துரையின் பேரில் நிறையப் பேருக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்கப்பட்டது. அவர்கள் அனைவரின் வெற்றிப் பொறுப்பும் அழகிரியின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தவிர, அவர்களை வெற்றிபெறவும் வைத்தார் அழகிரி. அதுமட்டுமின்றி, .பி.டி.ஆர்., பழனிவேல்ராஜன் இறந்ததால் மதுரை மத்திய தொகுதி மற்றும் மதுரை மேற்கு, திருமங்கலம் தொகுதி ஆகிய இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கு பொறுப்பேற்று தி.மு.க-வை வெற்றி பெற வைத்தார். இதையடுத்து  தி.மு.க.,வின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு நடைபெற்ற திருச்செந்தூர், கம்பம் இடைத்தேர்தல்களிலும் தி.மு.க-வை அழகிரி வெற்றி பெற வைத்தார். அதன்பிறகு, தி.மு.க-வின் தவிர்க்க முடியாத சக்தியாக, கட்சியின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவராக பரிணமிக்கத் தொடங்கினார்.

2009: லோக்சபா தேர்தலில்,மதுரை தொகுதியில் தி.மு.க சார்பில் நின்ற அழகிரி, அதில் வெற்றியும்பெற்று எம்.பி-யும் ஆனார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 

கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி அழகிரி

2011: அழகிரியின் சரிவு ஆரம்பமான வருடம் இது. அ.தி.மு.க ஆட்சியைப் கைப்பற்றிய வருடமும் கூட. மகன் தயாநிதி மீது கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகள் தொடுக்கப்பட்டன. அழகிரியும் கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கத் தொடங்கினார். 

2013: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்குக் கொடுத்த ஆதரவை தி.மு.க., வாபஸ் பெற்றது. அதனையொட்டி, தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அழகிரி. வயது மூப்பின் காரணமாகவும் உடல்நலக் குறைவு காரணமாகவும் கருணாநிதியால் முன்புபோல அரசியல் தளங்களில் செயல்பட முடியாத சூழல் உருவானது. அவருக்கு அடுத்து யார் என்கிற போட்டி மனப்பான்மை அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் உருவானது. 

2014: மதுரை நகர் நிர்வாக அமைப்பை, கட்சித் தலைமை கலைத்தது, அதனையொட்டி, அழகிரி ஆதரவாளர்களையும் நீக்கியது. இதனால் தி.மு.க மீது  கோபம் கொண்டார் அழகிரி. கட்சியின் முடிவுக்கு எதிராகவும் பேட்டி அளித்தார். இதன் காரணமாக, கருணாநிதியை மூன்று முறை அவருடைய இல்லத்துக்குச் சென்று சந்தித்தார் அழகிரி. ஆனால், கருணாநிதியோ அழகிரிக்கு ஆதரவான எந்தயொரு முடிவையும் எடுக்கவில்லை. 2014 ஜன., 24 அன்று தி.மு.க-விலிருந்து அழகிரி நீக்கப்படுவதாகக் கருணாநிதி அறிவித்தார். 

2018: இடைப்பட்ட காலங்களில் அரசியல் களத்தில் ஒதுங்கியிருந்த அழகிரி, கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்னைக்கு வந்தார். பிறகு, குடும்பத்தினருடன் நடைபெற்ற கட்சிப் பதவி தொடர்பான கலந்துரையாடலில் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. கருணாநிதி சமாதிக்கு நேற்று அஞ்சலி செலுத்த வந்த அழகிரி... செய்தியாளர்களிடம் "தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம்தான் இருக்கிறார்கள்...என்னுடைய ஆதங்கத்தை இன்னும் சில தினங்களில் தெரிவிப்பேன்" என்றார். 


டிரெண்டிங் @ விகடன்