`பள்ளி மாணவர்கள் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்!’ - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் கல்வித்துறை சார்பில் புதிய எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நாகதேவன் பாளையத்தில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், `அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 3 லட்சம் மாணவ, மாணவிகளைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, 1 லட்சம் மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புற பகுதிகளில் `ஸ்மார்ட்கிளாஸ்’ ஆரம்பிக்கப்பட்டதைப் போல, மலைப்பகுதிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பிக்கப்படும். மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் கணினிமயமாக்கப்படும். பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து புகார் தெரிவிக்க 14417 என்ற இலவச உதவிமைய எண்ணைத் தொடர்புகொள்ளலாம். இதன்மூலம் பெறப்படும் புகார்கள்மீது 24 மணி நேரத்துக்குள் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விவரங்கள் பாதுகாக்கப்படும். இந்தியாவிலே இந்த திட்டம் தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!