வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (14/08/2018)

கடைசி தொடர்பு:19:40 (14/08/2018)

3 கிராமங்களைச் சூழ்ந்தது வெள்ளம்... தீவில் தவித்த மக்கள் படகு மூலம் மீட்பு

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று கிராமங்களில் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை அரசு அதிகாரிகள் படகு மூலம் மீட்டனர்.

கொள்ளிடம்

காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாகக் கர்நாடகாவில் காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை இரண்டாவது முறையாக முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணை திறக்கப்பட்டு கல்லணையிலிருந்து காவிரி தண்ணீர் கீழணைக்கு இன்று விநாடிக்கு 90,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேபோல் கீழணையிலிருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 90,000 கன அடி திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

``பொது மக்கள் மற்றும் கால்நடைகள் ஆற்றுக்குச் செல்லக் கூடாது.  தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மேடான பகுதிக்குச் செல்ல வேண்டும்'' என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆறு மற்றும் பழைய கொள்ளிடம் இடையே உள்ள தீவு கிராமங்களான நடுத்திட்டு, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி உள்ளிட்ட கிராமங்களை இன்று காலை வெள்ளம்  சூழ்ந்தது.

படகு மூலம் மீட்கப்பட்ட மக்கள்

இதனால் கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள், மாணவ, மாணவிகள் கிராமத்தைவிட்டு வெளியே வரமுடியால் தவித்தனர். இதையடுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர், மின்சார வாரிய அலுவலர்கள் ஆகியோர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். கிராம மக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளைப் படகு மூலம் பெராம்பட்டு கிராமத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வந்தனர். அதிக அளவில் கொள்ளிடத்தில் தண்ணீர் செல்வதால் கரையோரம் பயிர் செய்யப்பட்டிருந்த நெல், கத்திரி, வெண்டை, மிளகாய், ரோஜா, முல்லை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.