உத்திரமேரூர் கிராம சபை கூட்டத்துக்கு கமல்ஹாசன் வருவாரா? - குழப்பத்தில் கட்சி நிர்வாகிகள்

காஞ்சிபுரம் மாவட்டம், கலியாம்பூண்டி கிராமத்தில் 72 வது சுதந்திர தினத்தையொட்டி, நாளை காலையில் நடைபெறும் கிராம சபை கூட்டத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கமல்ஹாசன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் பரவிவருகிறது.

கமல்ஹாசன்

“வருடத்தில் நான்கு நாள்கள் மட்டுமே கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இது யாருக்கோ நடக்கும் கூட்டம் என அனைவரும் போகாமலேயே விட்டுவிடுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் தங்கள் ஊரில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்” எனக் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நாளை காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள கலியாம்பூண்டியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பதாகக் கட்சியினருக்குத் தகவல் சொல்லியிருந்தார்கள்.

நாளை காலை உத்திரமேரூர் வரும் கமல்ஹாசன் அங்குள்ள சோழர்கால கல்வெட்டுக்களை பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து காலை 11 மணி அளவில் உத்திரமேரூர் அருகே உள்ள கலியாம்பூண்டியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பார். கிராம சபை கூட்டத்தை முடித்துவிட்டு காஞ்சிபுரத்தில் கட்சி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாகக் கமல்ஹாசன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்வதாகத் தகவல்கள் பரவின. இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர் ஒருவரிடம் தொடர்புகொண்டு பேசினோம். “கிராமசபை கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்துகொள்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்த பிறகு முறைப்படி தெரிவிக்கிறோம்” என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!