`பத்து லட்சம் மதிப்பில் 190 வேப்பங்கன்றுகள்...170 புளியங்கன்றுகள்!’ - கரூர் மாவட்ட நிர்வாகத்தின் 'பசுமை' முயற்சி | Karur district collector inspects various government projects across district

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (14/08/2018)

கடைசி தொடர்பு:22:30 (14/08/2018)

`பத்து லட்சம் மதிப்பில் 190 வேப்பங்கன்றுகள்...170 புளியங்கன்றுகள்!’ - கரூர் மாவட்ட நிர்வாகத்தின் 'பசுமை' முயற்சி

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டம், கடவைர் ஊராட்சி ஒன்றியத்தில், வரவணை, ஒடுகம்பட்டி, தென்னிலை, நன்னிப்பாறை, காணியாளம்பட்டி, சுக்காம்பட்டி, புங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் இன்று (14.08.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒடுகாம்பட்டி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் மூலம் 190 வேப்பங்கன்று, 170 புளியங்கன்று என மொத்தம் 360 மரக்கன்றுகள் ரூ.10 லட்சம் மதிப்பில் நடப்பட்டு பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருவதையும், நன்னிப்பாறை - காணியாளம்பட்டி பகுதிகளில் ரூ.6 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சுக்காம்பட்டியில் ரூ.0.88 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியையும், புங்கம்பாடியில் ரூ.94.12 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், 'விரைவில் பணிகளை முடிக்க வேண்டும்' என்று பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மாமரத்துப்பட்டி முதல் கீரனூர் வரை ரூ.225 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, 'பணிகளை உரிய காலத்துக்குள் தரத்துடன் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்' என்று அறிவுரை வழங்கினார். பின்னர், அங்கன்வாடியில் சமைக்கப்பட்டிருந்த சத்துணவைச் சாப்பிட்டுப் பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். சுக்காம்பட்டி பகுதியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் கழிவறையுடன்கூடிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கான இடத்தையும் அவர் பார்வையிட்டார்.