``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது!" - சோகத்தில் விவசாயிகள்! | Farmers urges government to take action to end water problem in Karur district

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (14/08/2018)

கடைசி தொடர்பு:20:30 (14/08/2018)

``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது!" - சோகத்தில் விவசாயிகள்!

விவசாயிகள் கூட்டம்

தென்மேற்குப் பருவமழையின் உபயத்தால், மேட்டூர் அணை 5 வருடங்களுக்குப் பிறகு இரண்டு முறை இந்த வருடம் அதன் முழுக் கொள்ளளவை அடைந்திருக்கிறது. அதோடு, காவிரியில் கட்டுக்கடங்காமல் தண்ணீர் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், காவிரி பாயும் கரூர் மாவட்டத்தின் தென்கோடி பகுதியில் உள்ள கடவூர் விவசாயிகள், 'அதனால் எங்களுக்கு யாதொரு பயனும் இல்லை' என்று கன்னத்தில் கைவைத்துக் கவலையோடு தெரிவிக்கிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் பகுதிகளுக்கு காவிரி ஆறு நீராதாரமாக விளங்குகிறது. கரூருக்கும், அரவக்குறிச்சிக்கும் அமராவதி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகளும், ஒரு சில பகுதிகளுக்கு காவிரியே நீராதாரமாக விளங்குகிறது. ஆனால், கடவூர் பகுதிவாழ் விவசாயிகளுக்கு காவிரியால் எந்தப் பலனும் இல்லாமல் இருக்கிறது. வானம்பார்த்த பூமியாகதான் உள்ளது. பருவமழை பொய்த்தால் விவசாயம் பொய்த்துவிடும். கடவூர் வட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளன. இவையனைத்தும் தற்போது நிரம்பாமல் வறண்டுபோய் கிடக்கிறது. தற்போது, குளித்தலை கிருஷ்ணராயபுரம், பிற பகுதிகளுக்கு தற்போதைய காவிரியில் அதிகப்படியான நீர்திறப்பு செய்தி மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், கடவூர் வட்ட விவசாயிகளுக்கு சோகத்தையே கொடுத்துள்ளது. இங்கு விவசாயம் பொய்த்ததால், விவசாய வேலையில்லாமல் பல இளைஞர்கள் கரூர் ஜவுளித் தொழிலுக்கும், மற்ற நகரங்களுக்கும் வேலை தேடி செல்லக்கூடிய நிலைதான் இருக்கிறது.

விவசாயிகள்

இந்நிலையில், கடவூரில் ஒன்றுகூடிய அனைத்துக் கட்சி மற்றும் விவசாய அமைப்புகள், விவசாயிகள் அனைவரும் கூடி காவிரி நீரை குழாய்கள் மூலமாக பம்ப் செய்து அல்லது கால்வாய்கள் மூலமாகவோ கடவூர், தரகம்பட்டி பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் சேமிக்க அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதுபற்றி, நம்மிடம் பேசிய விவசாயிகள் சிலர், ``காவிரியில் இந்த வருடம் எக்கச்சக்கமா தண்ணீர் வருது. ஆனால், காவிரியிலிருந்து தெற்கே பத்து கிலோமீட்டர்களில் உள்ள குளங்கள், ஏரிகள் நீரின்றி வறண்டு கிடக்கு. இதனால், விவசாயம் பண்ண முடியலை. ஆடு, மாடுகளுக்கு நீர் கிடைக்கலை. அதனால், காவிரி நீரை பம்ப் செய்தோ அல்லது கால்வாய்கள் மூலமாகவோ கடவூர் ஒன்றியங்களில் உள்ள இந்த ஏரி, குளங்களுக்குக் கொண்டு வந்து நிரப்ப வேண்டும். இதை அனைத்து விவசாயிகளும் ஆலோசனைக் கூட்டம் போட்டு, ஒன்றுகூடி பேசி முடிவு பண்ணி இருக்கோம். இந்தக் கோரிக்கையை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமா அரசுக்கு கோரிக்கையா வச்சுருக்கோம்" என்றார்கள்.