வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (14/08/2018)

கடைசி தொடர்பு:21:50 (14/08/2018)

`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 5 அணைகள் நிரம்பி வழிகின்றன. மேலும், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், தாமிரபரணி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ள எச்சரிக்கை

தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடிக்கிறது. அதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. அதேபோல ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. 

மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. அதனால் மணிமுத்தாறு அருவியில் குளிக்கச் சென்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். பண்குடி அருகே இருக்கும் குத்திரப்பாஞ்சான் அருவியிலும் தண்ணீர் அதிகமாக வருவதால் பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் கனமழையால் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் 124 அடியை எட்டியிருக்கிறது. அணைக்கு 4,200 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 156 அடி உள்ள சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 141 அடியாக இருக்கிறது. இந்த அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72 அடியாக உள்ளது. 

இதுதவிர, ராமாநதி அணை, கடனா அணை, அடவிநயினார் அணை, குண்டாறு அணை ஆகிய 4 அணைக்கட்டுகள் முழுக்கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்யும் மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும், வள்ளியூர் அருகே இருக்கும் கொடுமுடியாறு அணையும், முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 

சேர்வலாறு, பாபநாசம் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்தபடியே இருப்பதால், அந்த அணைகளிலிருந்து தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. அதனால் தாமிரபரணி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.