வெளியிடப்பட்ட நேரம்: 21:56 (14/08/2018)

கடைசி தொடர்பு:21:56 (14/08/2018)

மத்திய உளவுத்துறை எச்சரிக்கை... சுதந்திர தினத்துக்காகக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நான்குபேர், டெல்லிக்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்திருப்பதே, முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கை... சுதந்திர தினத்துக்காகக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

சுதந்திர தினக் கொண்டாட்டங்களைச் சீர்குலைக்கத் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாகக் கிடைத்துள்ள தகவலைத் தொடர்ந்து, சென்னை உட்பட நாடு முழுவதும் நாளை பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் 72 வது ஆண்டு சுதந்திர தினவிழா, நாடுமுழுவதும் புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அனைத்து மாநிலங்களிலும் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களின் விமான நிலையங்களில் ஏழடுக்குப் பாதுகாப்பும், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் வணிக மையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்தடுக்குப் பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள தகவலில், "குறிப்பிட்ட மாநிலத்தைச் சேராத வெளிநபர்கள், வெளிநாட்டினர் நடமாட்டம் குறித்து சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீஸார் போதிய கவனம் செலுத்த வேண்டும். அதுபோன்ற நபர்கள் மூலமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றுவிடக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டு, பெருநகரங்களிலும் சுற்றுலா நகரங்கள் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் சோதனை நடத்தப்பட வேண்டும். அதற்காகப் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருக்க வேண்டும். பொதுமக்களும் உரிய ஆதரவைத் தந்து, போலீஸாரின் பணிகளுக்குத் துணை நிற்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர நாள் பாதுகாப்புப் பணிகள்

தமிழகத்தில் சுதந்திர தினத்தையொட்டி, செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையாக, "சென்னையில் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெறும் கோட்டை பகுதியில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சென்னையின் முக்கியப் பகுதிகள், அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி இரவிலிருந்தே முக்கியப் பகுதிகளில் வாகனத் தணிக்கை, விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் ஆய்வு போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன" என்கிறார்கள் டி.ஜி.பி அலுவலக அதிகாரிகள். ரயில்வே போலீஸார் கூறுகையில், "லெவல் கிராஸிங் ஏரியா முதல் பிரதான ரயில் நிலையங்கள் வரை, உச்சகட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்குப் பின்னரே, அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல், வெளியூர், வெளிமாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களின் உடைமைகளும் சோதனை நடத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. போலீஸாரின் சோதனைக்கு ரயில் பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முக்கிய ரயில் நிலையங்களில் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் ஏதேனும் உள்ளதா எனச் சோதனை நடத்தப்படுகிறது. கமான்டோ பிரிவினரும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றனர். 

பாதுகாப்பு

மேலும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு பேருந்து நிலையம், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பாதுகாப்புப் பணிகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், தேசிய பாதுகாப்புப் படையினர், சிறப்பு அதிரடிப் படையினர் உள்ளிட்டோரும் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் கண்ணில் பட்டால், ரயில்வே பாதுகாப்புப் படையின் 1512 என்ற எண்ணிலோ, 182 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

சென்னையில் நாளை சுதந்திர தினக் கொண்டாட்டங்களையொட்டி, மெரினா உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான காமராஜர் சாலை, கொடிமரச்சாலை, அதன் தொடர்ச்சியாகப் போர் நினைவுச் சின்னம் தொடங்கி இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்குப் பகுதிவரை உள்ள ராஜாஜி சாலையில் காலை 6 மணி முதல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகரப் போலீஸார் தெரிவித்து உள்ளனர்.பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நான்குபேர், டெல்லிக்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்திருப்பதே, முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை நடத்தி முடிப்பதற்கு, சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதற்கு பொதுமக்களும் தங்களின் ஆதரவை அளிப்போம்..!


டிரெண்டிங் @ விகடன்