`க்யூ.ஆர் கோடு மூலம் எளிதில் பணம் பெறும் வசதி!’ - அஞ்சலக வங்கியின் புதிய திட்டம் | Postal Bank customers can easily receive the money by QR card

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (15/08/2018)

கடைசி தொடர்பு:13:23 (15/08/2018)

`க்யூ.ஆர் கோடு மூலம் எளிதில் பணம் பெறும் வசதி!’ - அஞ்சலக வங்கியின் புதிய திட்டம்

அஞ்சலகங்களில் பணம் பெறும் வகையில் அஞ்சலகத்தின் மூலம் தொடங்கப்பட உள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு க்யூஆர் கோடு வழங்கப்பட உள்ளது.

அஞ்சலக வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் க்யூ.ஆர் கார்டு

இந்திய அஞ்சல் துறையின் அடுத்த மைல்கல்லாக வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி அஞ்சலக வங்கிகள் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 650 அஞ்சலகங்களில் வங்கிச் சேவை பிரதமர் மோடியினால் தொடங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய ரிசர்வ் வங்கி, அஞ்சல் துறைக்கு வழங்கியுள்ளது. ஒரு நபர் ஒரு லட்சம் வரை இருப்புத்தொகை சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குள் தொடங்கிக்கொள்ளலாம். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப் பெறுவதற்கான சேவைகள், காப்பீடு, பரஸ்பர நிதிகள், ஓய்வூதியம், சர்வதேசப் பணப் பரிமாற்றங்கள் ஆகிய வசதிகளை அஞ்சலக வங்கி வழங்கவுள்ளது. ஆதார் எண் கொண்டு 10 நிமிடங்களில் அஞ்சலக வங்கிக் கணக்குத் தொடங்கியவுடன் அஞ்சலகங்களில் எளிதில் பணம்பெறும் வகையில் க்யூஆர் கோடு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வீரபத்ரன், ``அஞ்சலக வங்கிகளில் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் க்யூஆர் கோடு மூலம் அஞ்சலகங்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி, நாகாச்சி, இரட்டையூரணி, மண்குண்டு மற்றும் ராமநாதபுரம் தலைமை அஞ்சலகம் உள்ளிட்ட 5 அஞ்சலகக் கிளைகளில் முதற்கட்டமாக வங்கிச்சேவை ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் பரமக்குடியிலும் அதையடுத்து படிப்படியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 360 அஞ்சலகங்களிலும் இச்சேவை தொடங்கப்படும். இந்தியா முழுவதும் உள்ள எந்த ஓர் அஞ்சலகத்திலும் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. 1,000 ரூபாய் மட்டும் இருந்தாலே நடப்புக் கணக்கும் தொடங்கிக்கொள்ளலாம். வங்கி இருப்புத் தொகைக்கு 4 சதவிகித வட்டி வழங்கப்படும்.

கடந்த 2014 -2015-ம் ஆண்டில் செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் 19,962 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2017-2018 -ம் ஆண்டில் 83,060 சேமிப்புக் கணக்குகள் தொடங்கி மண்டல அளவில் ராமநாதபுரம் கோட்டம் 2-வது இடத்தைப் பெற்றது. கடந்த 2016-2017-ம் ஆண்டில் வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனையில் அகில இந்திய அளவில் ராமநாதபுரம் கோட்டமே முதலிடத்தைப் பெற்றிருந்தது'' என்றார். இதைத் தொடர்ந்து க்யூ.ஆர் கார்டைப் பயன்படுத்தும் முறை குறித்து அஞ்சலக வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் வீரபத்திரன், உதவி கோட்டக் கண்காணிப்பாளர் விஜயகோமதி ஆகியோர் செயல்விளக்கம் செய்து காட்டினர்.