வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (15/08/2018)

கடைசி தொடர்பு:01:30 (15/08/2018)

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்!

மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலன், மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 15-ம் தேதி (இன்று) முதல் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். 

முகிலன்

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றபோது தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக சுற்றுச்சூழல் போராளியான முகிலனை கூடங்குளம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 275 நாட்களைக் கடந்து சிறைச்சாலையில் உள்ள அவர்  நாட்டின் 72-வது சுதந்திர தினமான 15-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். 

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளதாக அவரது வழக்கறிஞர் சரவணகுமார் தெரிவித்தார். முகிலனின் கோரிக்கைகள் வருமாறு:

1. மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தியை கைது செய்ததை நீதிமன்றமே ஏற்க மறுத்த நிலையில், அடுத்தடுத்து அவர் மீது காவல்துறை  வழக்கு பதிவுசெய்ததை கைவிட்டு உடனே விடுதலை செய்ய வேண்டும்.

2. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. எட்டுவழிச் சாலை என்ற பெயரில், கவுந்திமலை மற்றும் வேடியப்பன் மலையை ஜிண்டால் நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

4. கர்நாடகாவில் மேகதாது அணையை காவிரியின் குறுக்கே கட்டி, காவிரி டெல்டாவை பாலைவனமாக்க முயற்சிக்கும் சதியை தடுக்கவேண்டும். 

5. தேனி பொட்டிபுரத்தில் அமெரிக்காவின் செயற்கை நியூட்ரினோ கற்றையை வைத்து ஆய்வு, மதுரை வடபழஞ்சியில் அணுக்கழிவு ஆய்வு மையம், கூடங்குளம் மற்றும் கல்பாக்கத்தில் அணுஉலை பூங்கா ஆகிய நாசகாரத் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

6. கோவையின் குடிநீர் விநியோகத்தை பிரெஞ்சு நாட்டின் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கக் கூடாது. பெப்சி, கோக் நிறுவனத்திற்கு தமிழக ஆறுகளை, நீர்வளங்களை தாரை வார்க்கும் திட்டங்களை நிறுத்த வேண்டும். 

7. கிரானைட் கொள்ளை பற்றிய சகாயம் அறிக்கையை, தாதுமணல் கொள்ளை பற்றிய ககன்தீப்சிங் பேடி அறிக்கையை சி.பி.ஐ. விசாரித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

8. மதுரை – போடி அகல ரயில் பாதையை விரைந்து அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களை உடனே விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்வதாக அறிவித்த 10 ஆண்டுகள் தண்டனை கழித்தவர்கள் குறித்த பட்டியலில், மத வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் காலதாமதம் செய்யாமல் இன்றி விடுதலை செய்ய வேண்டும். 

10. மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஓ.என்.ஜி.சி, அணுஉலை, நியூட்ரினோ, ஆற்றுமணல் குவாரி மற்றும் அபாயகரமான சிகப்பு வகை ஆலைகளுக்கு கருத்துகேட்பு கூட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளித்ததை கைவிட வேண்டும்.

இந்த 10 கோரிக்கைகளை முன்வைத்து அவர், தொடர் உண்ணாவிரதம் இருக்க உள்ளார்.