‘ஸ்டாலின் - அழகிரி மோதலுக்கு பா.ஜ.க காரணம் அல்ல’! - தமிழிசை

மு.க.ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் நடக்கும் சண்டை ஒன்றும் புதிய கதை அல்ல. அவர்களது சண்டைக்கும் பா.ஜ.க.வுக்கும் தொடர்பில்லை என்று தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


தமிழிசை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அலைவாய்க்கரைவாடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தேரோட்டத்தை துவக்கி வைக்க வந்திருந்த தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்’  ''கருணாநிதி இல்லாத தி.மு.க-வுக்கு ஒரு சவால் நிலை ஏற்பட்டுள்ளது.தி.மு.க-வில் குழப்பம் தொடங்கி இருக்கிறது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் நடக்கும் சண்டை ஒன்றும் புதியது இல்லை.அவர்களது சண்டைக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.தமிழகத்தில் எது நடந்தாலும் பா.ஜ.க.வைத் தான் குறை சொல்கிறார்கள். டி.டி.வி.தினகரனால் தமிழகத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. 
 

ராமநாதபுரம் மாவட்டத்திலும் மீனவர்கள் நலனை பாதுகாப்பதில் பா.ஜ.க.அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. சுதந்திர தினத்தன்று சுமார் 50 கோடி மக்கள் இலவச சிகிச்சை பெறும் வகையில் மாபெரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார்.மத்திய அரசின் உதய் திட்டத்தால் ரூ.10 ஆயிரம் கோடி தமிழக மின்வாரியத்துக்கு சேமிப்பாக வந்துள்ளது.புதிய உணவுத் திட்டத்தில் சேர்ந்ததால் சுமார் 10 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி ரபேல் போர் விமானப் பிரச்னையை தொடர்ந்து பேசி வருகிறார்.ராகுல்காந்தியின் கேள்விக்கு பிரான்ஸ் நாடே பதில் சொல்லி விட்டது.போபர்ஸ் ஊழலில் இருந்து காங்கிரஸ் இன்னும் மீண்டு எழ முடியவில்லை. அதே நேரத்தில் ஊழல் இல்லாத கட்சியாக பா.ஜ.க.தேர்தலை சந்திக்கப் போகிறது. இந்த பயத்தில் தான் காங்கிரஸ் பா.ஜ.க. மீது பல்வேறு அவதூறுகளை கூறி வருகிறது.தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தந்தாலும் ஊழல் நிறைந்ததாக இருந்து வருகிறது. ஊழல்,நகை திருட்டுச் சம்பவங்கள்,வழிப்பறிகள் ஆகியன தமிழகத்தில் தொடர்கதையாகவே ஆகிக் கொண்டிருக்கின்றன'' என்றார்.
.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!