வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (15/08/2018)

கடைசி தொடர்பு:12:24 (15/08/2018)

50 பைசா ஊதிய உயர்வு கேட்டதால் பெண்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்! துணை இயக்குநர் பேச்சு

பெண்கள்

 

மதுரை ஊடகம் மற்றும் திரைத்துறைக் கல்வி மையம் (MMFSA) மற்றும் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் (SIFWA) சார்பாக, திரைத்துறையில்  பெண்களுக்கான பங்களிப்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்களாக  இயக்குநர் சந்திரா மற்றும் துணை இயக்குநர் ஈஸ்வரி அவர்கள் பங்கேற்று ஊடகங்களில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர்.

துணை இயக்குநர் ஈஸ்வரி தமிழ் திரைத்துறை குறித்து கூறுகையில்," ஒரு கால கட்டத்தில் திரைத்துறையில் பணியாற்றிய பாத்திரம் சுத்தம் செய்யும் 'பெண் தொழிலாளர்கள்', 50 பைசா ஊதிய உயர்வு கேட்டதால் அவர்களை பணியிலிருந்து விலக்கினார்கள். நியாயமான ஊதியமில்லாமல் புறக்கணிக்கப்பட்டார்கள். அன்று 40 வருடங்களுக்கு முன்பு இருந்த மகளிர் ஊழியர் சங்கத்தை முன்மாதிரியாக கொண்டு இன்று நிறுவப்பட்ட அமைப்பே SIFWA.. இன்று பெண்களுக்கு எதிராக மீடியா பணியிடங்களில் நடக்கும் செயல்பாடுகளுக்கும், இத்துறையில்  பெண்களுக்கான மற்ற சவால்களுக்கும் குரல் எழுப்பி, பெண் படைப்பாளிகளுக்காக பிரத்யேகமாக "திரையாள்" என்ற காலாண்டு இதழும் வெளியிட்டுள்ளது. இன்றைய திரைத்துறை அரசியலில் பெண் இயக்குநர்கள் உருவாகுவது அவ்வளவு எளிதாக அமைந்து விடுவதில்லை!" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் சந்திரா,"பெண்களுக்கான உள்ளார்ந்த பிரச்னைகளை வெளிப்படையாக பேசவும், காட்சிப்படுத்தவும் பெண் இயக்குனர்களால் மட்டுமே முடியும். ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்களை சமூகம் பார்க்கும் கண்ணோட்டம் மாற்றப்பட வேண்டும்!" என்று  நிறைவு செய்தார்.