வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (15/08/2018)

கடைசி தொடர்பு:06:22 (15/08/2018)

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை... வாகன ஓட்டிகள் அவதி! 

தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாகவே கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில நேரங்களில் லேசான மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்தது. இதனிடையே, நேற்று மாலை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. 

கனமழை

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, சைதாப்பேட்டை, கே.கே.நகர், அசோக்நகர், தேனாம்பேட்டை, தியாகராயர்நகர், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் விடாமல் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகக் கன மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். ஆங்காங்கே தேங்கிய மழை நீரில் சிக்கிய வாகனங்களால் கடுமையான போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. 

இந்தச் சூழலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ``தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை அதனுடைய புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் இரண்டு நாள்களுக்குக் கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.