கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்.. மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை சமூக ஆர்வலர்..!

கோவையில், பெண்கள் கழிப்பிடத்தை சீரமைத்துத் தராத  ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, சமூக ஆர்வலர் ஒருவர் திறந்த வெளியில் மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மலம் கழிக்கும் போராட்டம்

"தமிழகம் முழுவதும் ஜூலை 31-க்குள் திறந்தவெளியில் மலம் கழிக்காதவர்கள் இல்லை" என்று நிலை உருவாகும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, கடந்த மாதம் அறிவித்திருந்தார். மேலும், கடலூர் மற்றும் விழுப்புரம் தவிர,  தமிழகத்தில் கழிப்பிடம் இல்லாத மாவட்டங்களே இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது சொந்த மாவட்டத்திலேயே திறந்தவெளியில் பெண்கள் மலம் கழிக்கும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஒன்றியம், சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இம்மிடிபாளையம் கிராமத்தில் 2012 – 13-ம் ஆண்டில் பெண்களுக்கான பொதுக்கழிப்பிடம், 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடம் ஒராண்டு மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளது. பழுதடைந்த கிடக்கும் அந்தக் கழிப்பிடத்தை சரி செய்ய, ஊராட்சி நிர்வாகம் தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அந்தப்பகுதி மக்கள் சாலைகளில் திறந்த வெளியில் மலம் கழித்து வருகின்றனர். உண்மை இப்படியிருக்க, சமூக ஆர்வலர் மணிதிறந்த வெளியில் மலம் கழிக்காத மாநிலமாக, தமிழ்நாடு இருப்பதாக  உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சொல்லி வருகின்றனர். ஆனால் இம்மிடிபாளையம் கிராமத்தில் தூய்மை கிராம இயக்கம் சார்பில், "திறந்த வெளி மலம் கழித்தலற்ற ஊராட்சி" என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகம் வைத்துள்ள பேனருக்குக் கீழே, மலம் கழிக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார் அப்பகுதியைச்சேர்ந்த மணி என்ற சமூக ஆர்வலர். இதுகுறித்து மணி கூறுகையில், "இந்தக கட்டடம் கட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான், அப்போதை அமைச்சர் தாமேதரன் திறந்துவைத்தார். ஆனால், ஓராண்டுக்குத்தான் அதைப் பயன்படுத்த முடிந்தது. கழிப்பறைகள் முற்றிலும் பழுதடைந்து காணப்படுகிறது. எவ்வளவோ சொல்லியும் தற்போதுவரை நடவடிக்கை இல்லை. ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், பெண்கள் திறந்தவெளியில்தான் மலம் கழித்து வருகின்றனர். எங்களது பெண்களுக்காக நான் மலம் கழிக்கும் போராட்டம் நடத்தினேன். இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!