வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (15/08/2018)

கடைசி தொடர்பு:11:28 (15/08/2018)

பெண்கள் முன்னேற்றம், ஜி.எஸ்.டி, விவசாயம்.. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை முழு விவரம்!

ஜி.எஸ்.டியால் நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான நிலையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினவிழாவில் பேசியுள்ளார். 

மோடி

நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியிலுள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றிவைத்து உரையாற்றினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர் பேசினார். அப்போது அவர், `பா.ஜ.க ஆட்சியில் நாடு புதிய வளர்ச்சியை நோக்கி சென்றுகொடிருக்கிறது. உலக அளவில் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகியுள்ளது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்துள்ளது. இந்த நேரத்தில் நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களை நினைவுகூருகிறேன். நாட்டின் எல்லையிலுள்ள ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் உறுதுணையாக உள்ளனர். அடுத்த வருடம் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நூறாவது வருடம். அந்தப் படுகொலையில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் சமூக நீதியைக் காக்கும் வகையில் உள்ளது. இந்திய அரசியல் சாசனம் கலங்கரை விளக்கமாக உள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல பருவநிலை நிலவுகிறது. ஆனால், நாட்டின் சில பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கல்கள். கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா பல்வேறு துறைகளில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்துவருகிறது. பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் புதிதாக எய்ம்ஸ், ஐ.ஐ.டிக்களை அமைத்துள்ளோம். புவி வெப்பமயமாதலை தடுப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஜி.எஸ்.டி சிறப்பாக அமல்படுத்த வணிகர்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர். இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றாலும், அவர்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களின் கடைக்கோடிப் பகுதிகளிலும் இந்த அரசு நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுய வேலை வாய்ப்பை ஊக்கப்படுத்தும் முத்ரா திட்டத்தின் மூலம் 13 கோடி பேருக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. சாலை வழி, வான்வழி, கடல்வழி ஆகியவற்றில் தன்னிறைவு அடைந்துவருகிறோம். நாம், விவசாயத்துறையில் புதுவிதமான மாற்றங்களைக் கொண்டுவருகிறோம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதுதான் நம்முடைய லட்சியம். 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டம் நிறைவேற்றப்படும்.

தூய்மை இந்தியா திட்டத்தில் லட்சக்கணக்கான குழந்தைகளால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடிகிறது. இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கான அரசியல் சாசனத்தை உறுதி செய்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 25 முதல் மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். நேர்மையானவர்களின் வரிப்பணம் மக்கள் திட்டங்களுக்குச் செலவழிக்கப்படும் என்று நான் உறுதி கூறுகிறேன். உச்ச நீதிமன்றத்தில் தற்போது மூன்று பெண் நீதிபதிகள் உள்ளனர். விளையாட்டு முதல் நாடாளுமன்றம் வரை பெண்கள் பங்கேற்பது பெருமையாக உள்ளது. ஆண்களைப் போல் பெண்களும் விரைவில் நிரந்தர அதிகாரத்தைப் பெறுவார்கள்' என்று பேசிய அவர், இறுதியில் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாத கீ ஜே ஆகிய வசனங்களைக் கூறி உரையை நிறைவு செய்தார். முன்னதாக உரையின் போது, பாரதியாரின் கவிதையைத் தமிழில் பேசினார்.