தண்டவாளத்தில் திடீர் நிலச்சரிவு... பெரும் விபத்தைத் தடுத்த இளைஞர்கள்... தப்பியது குருவாயூர் எக்ஸ்பிரஸ் | There was landslide on the railway track

வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (15/08/2018)

கடைசி தொடர்பு:11:26 (15/08/2018)

தண்டவாளத்தில் திடீர் நிலச்சரிவு... பெரும் விபத்தைத் தடுத்த இளைஞர்கள்... தப்பியது குருவாயூர் எக்ஸ்பிரஸ்

ரணியல் ரயில் நிலையம் பகுதியில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதால் தண்டவாளம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் தகவலால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது. தண்டவாளத்தைச் சீரமைக்க கிராம மக்கள் களம் இறங்கினர்.

தண்டவாளத்தில் கிடந்த கற்களை அகற்றும் பொதுமக்கள்

நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் தண்டவாள பாதையின் இரு புறமும் 30 முதல் 50 அடி உயரத்தில் மண் சுவர்கள் அமைந்துள்ளன. இந்த ரயில் பாதையில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவது வழக்கம். இதனால் பல பகுதிகளில் கற்களாலும், காங்கிரீட் கலவைகளாலும் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நடுவழியில் நிறுத்தப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ்

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்தது. இதன் காரணமாக இன்று காலையில் இரணியல் ரயில் நிலையம் அருகே பரம்பைப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் காலை 6.20 மணியளவில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த வழியாக வந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் ரயிலுக்கு எச்சரிக்கை காட்டி நிறுத்தினர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மண் சரிவு

பின்னர் பரம்பை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் தண்டவாளத்தில் கிடந்த மண், கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மண் சரிவை அடுத்து நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரயில் வழித்தடத்தில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.