குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கும் ஆசையால் பறிபோன சுற்றுலாப் பயணியின் உயிர்!

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளிக்கத்தடை விதிக்கப்பட்ட நிலையில், அதனை மீறி குளித்த சுற்றுலாப் பயணி ஒருவர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

குற்றாலம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையின் காரணமாக நெல்லை மாவட்டம், குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு  ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, இன்று 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை, விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரிப்போடு கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கனமழை தொடர்ந்து பெய்வதால் அருவிகள் ஆர்ப்பரிக்கின்றன. புலி அருவியில் தடையை மீறி அதிகாலையில் குளித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். வெள்ளத்தில் சிக்கி குப்புற விழுந்ததில் மூக்கில் அடிபட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்துள்ளது.

கனமழை காரணமாக அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணிமுத்தாறு அருவியில்  2-வது நாளாக சுற்றுலாப் பயணிகளை குளிக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பியுள்ளதால் உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. வெள்ளம் அதிகமாக இருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது. ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தாமிரபரணி ஆறு

நெல்லை மாவட்டத்தில், இன்று அதிகாலை வரையிலும் அதிகப்பட்சமாக செங்கோட்டையில் 27 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் பகுதியில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால், குண்டாறு அணை, ராமநதிஅணை, கடனா அணை, கருப்பாநதி அணை, கொடுமுடியாறு அணை, அடவிநயினார் அணை ஆகிய 6 அணைகள் நிரம்பி விட்டன. சேர்வலாறு அணை, பாபநாசம் அணை ஆகியவையும் வேகமாக நிரம்பி வருகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!