5 யூனிட்டில் 3 யூனிட் அவுட்... தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தொடரும் பாதிப்பு | 630 MW power generation affected in Thoothukudi power plant

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (15/08/2018)

கடைசி தொடர்பு:11:25 (15/08/2018)

5 யூனிட்டில் 3 யூனிட் அவுட்... தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தொடரும் பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்கெனவே இரண்டு யூனிட்டுகளில் மின்சார உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 2வது யூனிட்டிற்கு வரும் கேபிளில் ஏற்பட்ட தீ விபத்தினால் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. 

இந்தியாவின் பழைமையான அனல்மின் நிலையங்களில் தூத்துக்குடி அனல்மின் நிலையமும் ஒன்று. நிலக்கரி அடிப்படையிலான இந்த அனல் மின் நிலையம் கடந்த 1979-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இதில் மொத்தம் 5 யூனிட்டுகள் உள்ளன. ஒவ்வொரு யூனிட்டும் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த 5 யூனிட்டுகள் மூலம், 1,050 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஆனால், இதிலுள்ள முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவையும்விட, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இதனால், யூனிட்டுகளில் உள்ள கொதிகலனில் அவ்வப்போது பழுது ஏற்பட்டு மின்சார உற்பத்தி தடைபடுகிறது. சில நேரங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறையினாலும் மின்சார உற்பத்தி தடைபட்டு வந்தது.

இந்த நிலையில், மின்சாரத் தேவை குறைவின் காரணமாக 3-வது யூனிட்டில் கடந்த சில நாள்களாக மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு, இயந்திரக் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதினால் 1-வது யூனிட்டிலும் மின்சார உற்பத்தி தடைபட்டது. இந்தநிலையில், இன்று 2-வது யூனிட்டில் மின்சார உற்பத்தி இயந்திரத்துக்குச் செல்லும் கேபிளில் திடீரெனத் தீப்பிடித்தது. இதையடுத்து உடனடியாக, மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுதினைச் சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  4-வது மற்றும் 5-வது யூனிட்டுகளில் மட்டும் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close