கலைநிகழ்ச்சியுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய திருநங்கைகள்!

நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது 72-வது சுதந்திர தினவிழா. சென்னை மாநகராட்சி திருநங்கைகள் காப்பகத்தில் `தோழி' என்னும் திருநங்கைகள் அமைப்புடன் இணைந்து திருநங்கைகள் கொண்டாடிய சுதந்திரதின விழா சென்னையில் சேத்துப்பட்டில் நடைபெற்றது..

தென்னிந்திய ஃபேஷன் உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த சுனில் மேனன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். மேலும், மரக்கன்றினை நட்டுப் பேசிய அவர், ``தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைகள் சேர்ந்து கொண்டாடும் சுதந்திர தினவிழாவில் கலந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி. திருநங்கைகள் தங்குவதற்காகக் காப்பகத்தினை ஏற்படுத்திக் கொடுத்து தமிழக அரசு சிறப்பான உதவிகளைச் செய்து வருகிறது. இந்த சுதந்திர தின நன்னாளில்தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் " என்றார்.

தோழி அமைப்பின் திட்ட இயக்குநர் சுதா பேசியபோது, ``இந்தியா சுதந்திரமடைந்து 72 வருடங்கள் ஆகியுள்ள போதும் திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இனியேனும் அது குறைய வேண்டும் என்பதை இந்நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும்" என்றார். சமூக சேவகர் நந்தினி ஶ்ரீ கலந்துகொண்டு திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருநங்கை தனபாக்கியம் பேசியபோது, ``இந்நாளில்தான் உண்மையிலேயே எங்களுக்குச் சுதந்திரம் பெற்ற உணர்வு கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஆதரவற்ற திருநங்கைகளுக்கான காப்பகத்தினை தமிழக அரசு தந்துள்ளது என்பது மிகவும் வரவேற்கக்கூடிய நிகழ்வு. மேலும் இது தொடர வேண்டும்" என்றார். இவ்விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருநங்கைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவின் இறுதியில் திருநங்கைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் தான் திருநங்கைகளின் உண்மையான மகிழ்ச்சியைக் காண முடிந்தது என்பது பொதுமக்கள் பலரின் கருத்தாக இருந்தது.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!