மக்களாட்சியின் உயிர்நாடி கிராம சபை! | grama sabha meetings isThe democracy's life

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (15/08/2018)

கடைசி தொடர்பு:12:20 (15/08/2018)

மக்களாட்சியின் உயிர்நாடி கிராம சபை!

இந்தியாவின் எதிர்காலம் கிராமங்களில் உள்ளது என்றார் மகாத்மா காந்தி. நம்ப ஊரோட முன்னேற்றத்துல நம்மலால முடிவெடுக்க முடியும். அது உங்களுக்குத் தெரியுமா. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுல மக்களாட்சி, பேச்சு உரிமை, சமதர்மம், கிராம தன்நிறைவு, சுகாதாரம், பொருளாதாரம்ன்னு எல்லாத்தையும் சாத்தியமாக்கும் கருவி ஒண்ணு இருக்கு. அதுதான் கிராம சபை கூட்டம்.

கிராமசபை


இந்தியாவுல இருக்க எல்லா கிராமங்களிலும் இந்த கிராம சபை வருஷத்துக்கு 4 நாள் (ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2) நடைபெறும். மக்களாட்சியோட உயிர்நாடியான மக்கள் கையில் அதிகாரத்தை அளிப்பதுதான் கிராம சபையோட முக்கிய நோக்கம். இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 243, 243 (ஆ)ல் கிராம சபை பற்றி குறிப்பிட்டுள்ளது. பஞ்சாயத்து நிர்வாக அமைப்பின் மிகவும் வலிமை வாய்ந்தது கிராம சபையே. பின்வரும் முடிவுகள் எடுக்க கிராம சபைக்கு அதிகாரம் இருக்கிறது. சாலைபோடுவது, தெரு விளக்கு அமைப்பது, தண்ணீர்த் தொட்டி, கழிப்பிட வசதி, சுகாதார மேம்பாடு, பள்ளிக் கட்டடம் என நம்பளோட அனைத்துத் தேவைகளையும் இந்தக் கூட்டத்துல நிறைவேற்றலாம்.

கிராம ஊராட்சியின் வரவு செலவு கணக்கையும் இங்க விவாதிக்கலாம். எல்லா ஐந்தாண்டுத் திட்டத்திலையும் கிராம வளர்ச்சிக்குப் பலகோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அது சரியான முறையில செலவு செய்யப்படுகிறதா எனச் சரிபார்க்கலாம். நாம அரசுக்குச் செலுத்தும் வரிப் பணம் மீண்டும் நமக்கு வளர்ச்சித் திட்டங்களாக வர கிராம சபை ஒரு பாலமாக அமையும். நம்ப கிராமம் சார்பாகச் செய்த வேலைகளோட தணிக்கை அறிக்கையை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டம், இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம் என தனிநபர் பயன்பெறும் எல்லா திட்டங்களிலும் பயன்பெறுவோர் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கணும். கிராம மக்கள் சேர்ந்து அரசு மதுக்கடைகளை மூடணும்னு தீர்மானம் எடுத்தா அக்கடைகளை திறக்கக் கூடாதுனு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வளவு நன்மைகள் இருக்க கூட்டத்துல குறைந்தபட்சம்  மக்களாச்சும் கலந்துகொள்ள வேண்டும். அதுக்கான வரையறை பின்வருமாறு.

 *கிராம மக்கள்தொகை           -     பங்கு பெறும் மக்கள்

      500               -      50
     501-3000    -      100
     3001-10000 -      200
    10000 மேல்  -      300

பங்கு பெறுபவர்களில் 1/3 சதவிகிதம் பெண்களாகவும், சிறுபான்மையினராகவும் (மக்கள் சதவிகிதத்துக்கேற்ப) இருக்க வேண்டும்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வித்திட இக் கிராமசபை சுதந்திர தினத்தன்றும் எல்லா கிராமங்களிலும் நடைபெறும். நம்மில் பலர் வேறு ஊர்களில் இருந்தாலும் நம் கிராமத்தின் வளர்ச்சிக்காக நம் கடமையை ஆற்ற கிராம சபைகளில் பங்குகொள்வது (குறிப்பாக இளைஞர்கள்) ஓட்டுரிமைபோல இதுவும் நம் கடமை. செல்வோம் கிராம சபைக்கு...உருவாக்குவோம் வளமான இந்தியாவை.