டிக்கெட் கேட்ட கண்டக்டர்; செயினைக் காணவில்லை என்ற மூதாட்டி- ஓடும் பேருந்தில் 4 பெண்கள் கைவரிசை

ஜெயங்கொண்டத்தில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறித்த 4 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மூதாட்டியிடம் செயினை திருடிய பெண்கள்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தைச் சேர்ந்த ஜெயலெட்சுமி என்ற மூதாட்டி, ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில் உள்ள தனது மகன் வீட்டுக்குப் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது கல்லாத்தூர் அருகே பேருந்து சென்றபோது நடத்துநர் டிக்கெட் கேட்டுள்ளார். பணத்தை எடுக்கும்போது மூதாட்டி தனது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பேருந்தில் இருக்கையின் அருகே எங்கு தேடியும் தங்கச் சங்கிலியைக் காணவில்லை. இந்தநிலையில் ஃபர்தா அணிந்து பேருந்தில் பயணம் செய்த 4 பெண்கள் மீது சந்தேகம் வரவே நடத்துநர் நான்கு ரோட்டில் இருந்த காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் 4 பெண்களையும் பிடித்து விசாரித்தபோது செயினைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். 

விசாரணையில், அவர்கள் ஏர்வாடியைச் சேர்ந்த சுப்பு, ராணி, இசக்கியம்மாள் மற்றும் ரம்யா என்பது தெரியவந்தது. ஓடும் பேருந்தில் சக பயணிபோல் ஃபர்தா அணிந்து வந்து பெண்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!