கால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தை... `சுதந்திரம்' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்த சென்னைப் பெண்! 

சென்னை வளசரவாக்கத்தில் வாய்க்காலில் கிடந்த, பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தையை மீட்ட பெண் ஒருவர் அந்தக் குழந்தைக்கு `சுதந்திரம்' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார். 

குழந்தை சுதந்திரம்

சென்னை வளசரவாக்கம் எஸ்விஎஸ் நகர் 6 வது குறுக்குத் தெரு அருகே உள்ள வாய்க்காலில் இன்று காலை குழந்தை அழும் சத்தம்  கேட்டது. இதைக் கேட்ட அப்பகுதி பெண் கீதா என்பவர் உடனடியாக வாய்க்கால் அருகே சென்று பார்த்தபோது பிறந்த சில மணிநேரங்களே ஆன குழந்தை அழுதுகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த ஆண் குழந்தையை மீட்ட அவர், அருகில் உள்ள காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீஸார் அக்குழந்தையைக் கைப்பற்றி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் தற்போது குழந்தை நலமாக உள்ளது. 

ஆனால், குழந்தையை யார் கால்வாயில் வீசினர் என்பது குறித்து விவரங்கள் தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், குழந்தைகள் நலக் காப்பகம் உதவியுடன் மீட்கப்பட்ட குழந்தை தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. எனினும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். முன்னதாக, வாய்க்காலிலிருந்து குழந்தையை மீட்ட கீதா என்ற பெண் அக்குழந்தைக்கு `சுதந்திரம்' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார். சுதந்திர தினத்தன்று குழந்தை கிடைத்ததை அடுத்து அவர் இவ்வாறு பெயர் சூட்டியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!