'போராடினா சுடுவோம்' என 1946-ல் சொன்ன போலீஸுக்கு தோழர் ஜீவானந்தத்தின் பதில்! | Let's remember Jeeva, freedom fighter in Independence Day

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (15/08/2018)

கடைசி தொடர்பு:11:32 (16/08/2018)

'போராடினா சுடுவோம்' என 1946-ல் சொன்ன போலீஸுக்கு தோழர் ஜீவானந்தத்தின் பதில்!

சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த பலரும் வரலாற்றுகளில் மட்டுமல்ல நம் நினைவுகளில் இருந்தும் மறக்கடிக்கப்பட்டு விட்டனர். அத்தகைய பலரில் ஒருவரான  பொதுவுடமைவாதி 'ஜீவா' என்றழைக்கப்படும் தோழர் ஜீவானந்தத்தை பற்றி இந்த நாளில் பகிர்ந்து கொள்வோம்.

'போராடினா சுடுவோம்' என 1946-ல் சொன்ன போலீஸுக்கு தோழர் ஜீவானந்தத்தின் பதில்!

இந்தச் சுதந்திரத்தினை இன்று நாம் சுகமாய் அனுபவிப்பதற்கு ஆயிரமாயிரம் பேர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். அவர்களில் சிலர் மட்டுமே அரசு நிகழ்வுகளிலும், பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் தொடர்ச்சியாக நினைவுகூரப்பட்டு வருகின்றனர். சுதந்திரத்துக்காகப் போராடி உயிர்நீத்த பலரும் வரலாறுகளில் மட்டுமல்ல... நம் நினைவுகளில் இருந்தும் மறக்கடிக்கப்பட்டுவிட்டனர். அத்தகைய பலரில் ஒருவரான  பொதுவுடைமைவாதி, 'ஜீவா' என்றழைக்கப்படும் தோழர் ஜீவானந்தம். அவரைப் பற்றி இந்த விடுதலை நாளில் பகிர்ந்துகொள்வோம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி கிராமத்தில் 1907-ம் ஆண்டு ஆகஸ்ட்  21-ல் பிறந்தவர் ஜீவானந்தம்.கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பைப் பயின்ற ஜீவானந்தம், காந்தியடிகளின் சுதந்திரப் போராட்ட வடிவங்களில் ஒன்றான, 'ஒத்துழையாமை இயக்க'த்தின் அறைகூவலால் ஈர்க்கப்பட்டார். 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே 'சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன்' என்ற நாவலை எழுதினார். நாஞ்சில் நாடான பூதப்பாண்டிக்கு அருகில் உள்ள திட்டுவிளை என்ற இடத்தில் நடந்த அந்நியத் துணி பகிஷ்கரிப்பு கூட்டத்தில் பங்கேற்ற ஜீவானந்தம், தான் அணிந்திருந்த அந்நியத் துணியிலான ஆடைகளை எரியும் தீயில் அவிழ்த்து வீசிவிட்டு, தான் கட்டியிருந்த கோவணத்துடன் வீடு திரும்பினார். அன்று அவர் அணிய தொடங்கிய கதர் ஆடை, அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்தது.

தோழர் ஜீவானந்தம்

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற ஜீவானந்தம், 1924-ல் கேரள மாநிலம் வைக்கம் நகரில் தந்தை பெரியார் தலைமையில் நடந்த தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கேற்றார். இதனால் பல இன்னல்களுக்கு உள்ளான ஜீவானந்தம், தனது பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் போனது. ஜீவானந்தத்தின் சுதந்திர உரையினைக் கேட்ட வ.உ.சி., ``ஜீவானந்தம் போன்ற சிலர் இருந்தாலே போதும்... நாடு விடுதலை பெற்றுவிடும்'' எனக் கூறி பாராட்டினார். 

1927-ல் தமிழகம் வந்த காந்திஜி, ஜீவானந்தம் நடத்திவந்த ஆசிரமத்துக்குச் சென்றார். அங்கே தன் கையால் நூற்ற 10 ஆயிரம் கெஜம் நூலை காந்திஜிக்கு வழங்கினார். இதனைப் பெற்றுக்கொண்ட காந்திஜி, ''உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது'' என ஜீவானந்தத்திடம் கேட்டார். ஜீவானந்தமோ, ''இந்திய நாடுதான் எனது சொத்து'' என்றார். அதனை மறுத்த காந்திஜியோ, ''இல்லை... இல்லை நீங்கள்தான் இந்தியாவின் சொத்து'' என்றார். 

இதனைத் தொடர்ந்து நடந்த சட்ட மறுப்பு இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார், ஜீவானந்தம். காரைக்குடியில் 1932-ம் ஆண்டு அவர் ஆற்றிய ஆவேச உரையினைக் கேட்ட ஆங்கிலேய அரசு, ஜீவானந்தத்துக்கு 'வாய்ப்பூட்டு' போட்டு மிரட்டியது. இந்த உத்தரவை மீறிய ஜீவானந்தம், மறுநாளே கோட்டையூரில் உரையாற்றினார். இதனால் அவர் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் சோசலிசம், கம்யூனிச தத்துவங்களை அறிந்துகொண்டார். இதனால், காங்கிரஸ்காரராகச் சிறைக்குச் சென்ற ஜீவானந்தம், வெளியில் வந்தபோது பொதுவுடைமைச் சிந்தனைகொண்டவராக வெளியே வந்தார்.

மாவீரன் பகத்சிங் எழுதிய, 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்?' என்ற கட்டுரையைப் பதிப்பித்த பெரியாரை மட்டுமல்ல... மொழிபெயர்த்த ஜீவானந்தத்தையும் சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறைகளுக்கு அலைகழிக்கப்பட்ட ஜீவானந்தம்தான், மொழிபெயர்ப்பு செய்தமைக்காகத் தமிழகத்தில் முதன்முறையாகச் சிறைபிடிக்கப்பட்டவர் என்ற நிலையினையும் அடைந்தார். 'புரட்சி' ஏட்டில் இவர் எழுதிய கட்டுரைகளால் அந்த ஏட்டினையே ஆங்கில அரசு தடுத்து நிறுத்தியது.

1937-ல் சென்னை மாகாணத்தில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் அரசு, தனது தேர்தல் வாக்குறுதியான 'குற்ற பரம்பரைச் சட்ட ஒழிப்பி'னைக்விடுதலை போராட்ட வீரர் ஜீவானந்தம் கைவிட மறுத்தது. இதற்கு எதிராக வெகுஜன போராட்டம் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தது. இதன்விளைவாக இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு முழுக் காரணமானவர்கள் ஜீவானந்தம், முத்துராமலிங்க தேவர், பி.ராமமூர்த்தி போன்றோர்.

 தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களை ஒன்றிணைத்து அவர்களைச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திய ஜீவானந்தம், தானே அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை வகித்தார். அந்தப் போராட்டங்களின்போது தாக்குதலுக்கும் உள்ளானார். இரண்டாவது உலகப்போருக்கு எதிராகத் தொழிலாளர்களைத் திரட்டிப் போராடியதால் ஜீவானந்தம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்த பின்னரும் தனது போராட்டங்களைத் தொடர்ந்ததால், ஜீவானந்தம் சென்னை மாகாணத்தைவிட்டு வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது. கம்யூனிஸ்ட்கள் மீது தாக்குதல்களையும் ஏவியது. இதனால் ஜீவானந்தம் தலைமறைவானார்.

1946-ல் உருவான கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவாகத் தொழிலாளர்கள் ஜீவானந்தம் தலைமையில் பேரணி சென்றனர். ``பேரணி சென்றால் சுடுவோம்'' எனக் காவலர்கள் மிரட்டினர். ''தைரியமிருந்தால் சுடு'' எனச் சொல்லி மார்பைத் திறந்து காட்டியபடி ஜீவானந்தம் முன்னேறிச் சென்றார்.

 1947-ல் பத்மாவதி என்பவரை சீர்திருத்த திருமணம் செய்துகொண்ட ஜீவானந்தம், தனது இறுதிக்காலம் வரை தாம்பரம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்ட குடிசையிலேயே வாழ்ந்து வந்தார். 

நாட்டின் சுதந்திரத்துக்காக ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடி சிறைக் கொடுமைகளை அனுபவித்து வந்த ஜீவானந்தம், நாட்டு விடுதலைக்குப் பின்னரும் தனது கொள்கைகளுக்காகத் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தனது வாழ்நாளில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைகளிலும், போலீஸ் காவலிலும் கழித்த ஜீவானந்தம், சாதி-மத வேறுபாடுகளையும், மூடப்பழக்கவழக்கங்களையும் தனது இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்துப் போராடினார் என்பதை இந்த நாளில் நினைவுகூர்வோம்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close