வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (15/08/2018)

கடைசி தொடர்பு:18:40 (15/08/2018)

`8 வழிச் சாலை வேண்டாம்'- கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

நிலவாரப்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்

சேலத்தில்  8 வழி சாலை பாதிக்கப்பட்ட  கிராமங்களிலும், விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.  அந்த மக்கள் இந்த கிராம சபை கூட்டத்தை தங்கள் உயிராயுதமாக கருத்தி 8 வழிச் சாலை திட்டமும், விமான நிலைய விரிவாக்க திட்டமும் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

சேலம் டூ சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை மத்திய அரசு 10 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு மக்கள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு  இருந்து வந்தது. அதை பொருட்படுத்தாமல் கடந்த 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பகுதிகளில் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸிபோல காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கருத்துகளைகூட கூற முடியாத அடக்குமுறையை பயன்படுத்தி நில அளவீடு செய்தார்கள்.

அவர்களின் கருத்துகளை வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் என எந்த துறையினரும் கண்டுக்கொள்ளவில்லை. அவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டு ஒலிக்கப்படாமலேயே இருந்தது. இந்த நிலையில் தான் இன்று சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. சேலத்தில் 8 வழி சாலையால் பாதிக்கப்பட்ட கிராமங்களிலும்,  விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள கிராமங்களிலும் உள்ள மக்கள் இந்த கிராம சபை கூட்டத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பல போராட்டங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் ஒருமனதாக கூடி  8 வழி சாலையால்  இயற்கை அழிக்கப்படுவதோடு எங்களுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அதேபோல விமான நிலையம் விரிவாக்கம் செய்ய உள்ள கிராமங்களில் விமான நிலைய விரிவாக்கம் தேவையில்லை என்றும் நிலவாரப்பட்டியில் இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.