டெல்லியில் பிரதமர் மோடி வீட்டு முன் போராட்டம் நடத்த முயன்ற மதுரை நந்தினி கைது!

பிரதமர் மோடி வீட்டின் முன்பு போராட்டம் நடத்த முயன்ற சமூகப்போராளி மதுரை நந்தினியையும் அவர் தந்தையையும் இன்று டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

டாஸ்மாக் நடத்தும் தமிழக அரசுக்கு எதிராகவும், சமூகப் பிரச்னைகளுக்காகவும் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே போராட்டங்கள் நடத்தி வருபவர் நந்தினி. இதனால் அரசு அடக்குமுறைகளையும் பல்வேறு வழக்குகளையும் நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும் சந்தித்து வருகிறார்கள்.

நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும்

இதனிடையே, பிரதமர் மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் அவர் வீட்டு முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து, கடந்த மாதம் கிளம்பியபோது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று பிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு எப்போதும் கண்காணித்துக்கொண்டிருக்கும் காவல்துறைக்கே தெரியாமல் இரண்டு நாள்களுக்கு முன் மதுரையிலிருந்து கிளம்பி டெல்லி வந்தார்கள். நேற்று ஜாலியன் வாலாபாக் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் `வெள்ளைக்கார ஆட்சியில் ஜாலியன் வாலாபாக் படுகொலை. மோடி ஆட்சியில் தூத்துக்குடி படுகொலை, இது சுதந்திர நாடா?' என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாகையுடன் அங்கு போராட்ட உறுதிமொழி எடுத்தனர். 

காலை சுதந்திர தினக் கொடியேற்ற நிகழ்வுகளுக்குப் பின் பிரதமர் மோடி வீட்டை நோக்கி நந்தினியும் அவர் தந்தை ஆனந்தனும் சென்றனர். அதற்குள் தகவல் தெரிந்து டெல்லி காவல்துறையினர் இருவரையும் கைது செய்து டெல்லி காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். தற்போது தமிழக காவல்துறையிடம் நந்தினி பற்றிய விவரங்களை விசாரித்து வரும் டெல்லி காவல்துறை, அவர்களை விட்டு விடுவார்களா அல்லது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்புவார்களா என்பது தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!