`கவனிக்கப்படாத நிலையில் மக்கள் பணிகள்' - கிராமசபையை புறக்கணித்த மூன்று கிராம பொதுமக்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் நடந்த கிராமசபைக் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். 

கிராமசபை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ஊராட்சியில் அதிகாரிகளை கிராம சபை கூட்டம் நடத்தவே அனுமதிக்காமல் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்து பொதுமக்கள் ஒருவர் கூட பங்கேற்காமல் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த கிராமத்தை பாலா என்பவர் பேசுகையில், ``பல வருடங்களாக வேலப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வீடு இல்லாத பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதற்காக அரசுக்கு பல மனுக்களும் கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. அதே போல சமூதாயக்கூடம், ஆரம்ப சுகாதாரநிலையம், துணைமின் நிலையம், சாலை சீரமைத்து தர வேண்டும் என்றும் கேட்டிருந்தோம். ஆனால் அதிகாரிகள் மக்களின் கோரிக்கையை கவனிக்கவே இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று கிராமசபையை பொதுமக்கள் புறக்கணித்தனர். 

வேறு ஒருநாள் ஆர்டிஓ முத்து சாமியை வைத்து கிராமசபையை நடத்த முயற்சி செய்தால் அவரையே சிறைபிடிப்போம் என்று சொல்லி கிராமசபை கூட்டம் நடத்த வந்த பிடிஒ நரேந்திரபாபு மற்றும் அதிகாரிகளை திருப்பி அனுப்பி வைத்தனர்" என்றார். இதேபோல திருத்தணி அடுத்த சிறுகுமி என்ற கிராமத்திலும் அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் கிராமசபையை புறக்கணித்தனர். மேலும் திருவள்ளூர் அடுத்த புட்லூர் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற  அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு போகும் சாலையை அதிகாரிகள் சீரமைக்கவில்லை. ஒரு நாளைக்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்தச் சாலையை இதுவரை சீரமைக்கவில்லை. 

அதை கண்டித்து இன்று அந்த கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளை  பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விடுவதாக ஊர் முன்னாள் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பிரகாஷ் என்பவர் மிரட்டினார். அதே கிராமத்தை சேர்ந்த ஜெனித் என்பவர், ``நடக்காத பல வேலைகளுக்கு போலியான பில் போடப்பட்டு பல லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி விசாரணை நடத்தவேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். இதனால் அந்தக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் பெரியபாளையம் அருகே உள்ள வண்ணாங்குப்பம் பகுதிக்கு பார்வையிட வந்த மத்தி அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேள்வி கேட்டனர். `மக்கள் பணிகள் ஒன்னு கூட நடக்காத கிராமத்திற்கு ஏன் வந்தீர்கள்' என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். முன்னதாக இவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை சீரமைக்ககோரி சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!