தஞ்சை மருத்துவமனை பிணவறை அருகே பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு!

தஞ்சாவூர்  மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் பிணவறை அருகே பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் பெண்  குழந்தை ஒன்று ஆதரவற்று கிடந்தது. அந்தக் குழந்தையை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்தக் குழந்தைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீட்கப்பட்ட குழந்தை

தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள பிணவறை அருகே பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆதரவற்றுக் கிடப்பாதக 108 ஆம்புலன்ஸ் பிரிவுக்கு பொதுமக்களில் ஒருவர் தகவல் கொடுத்தார். இதனையடுத்து, அந்த இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர், குழந்தை குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். உடனே, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை போலீஸார், அந்தக் குழந்தையை மீட்டு அரசு ராஜாமிராசுதார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தையை அனுமதித்த டாக்டர்கள்,  பரிசோதித்ததில் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்திருப்பது தெரியவந்தது. 

மீட்கப்பட்ட குழந்தை

இதையடுத்து, அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குறை பிரசவத்தில் பிறந்ததால் பெற்றோர்களே  இந்த குழந்தையை தூக்கி போட்டு விட்டு 108-க்கு தகவல் கொடுத்தார்களா அல்லது குழந்தையை யாரேனும் திருடிபோட்டு விட்டு சென்றார்காளா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய பெண் ஒருவர், `குழந்தை பாக்கியம் இல்லை என பலர் ஏங்கி தவித்து வருகின்றனர். இன்றைக்கு தாய்மை எனும் அன்புதான் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. தன் குழந்தைக்கு சின்னக் கீறல் விழுந்தால் கூட எந்த தாயாலும் தாங்க முடியாது. அப்படி இருக்கும்சூழலில் பச்சிளம் குழந்தையை போட்டுவிட்டுச் செல்ல அந்த தாய்க்கு  எப்படிதான் மனது வந்ததோ தெரியவில்லை. அதுவுன் பிணவறை அருகே வீசிச் செல்வதற்கு’’ என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!