வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (16/08/2018)

கடைசி தொடர்பு:09:05 (16/08/2018)

தமிழக - கேரள போக்குவரத்தை நிறுத்திய நிலச்சரிவு!

தமிழக - கேரள போக்குவரத்தில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் சாலைகளில் ஒன்று, குமுளி – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை. இச்சாலையில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, தமிழக - கேரள போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டது.

நிலச்சரிவு

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணை மூன்றாவது முறையாக 142 அடியை எட்டியது. கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளை அடுத்து, இன்று முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டியது விவசாயிகள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவை கணக்கிட்டு, அதற்கு ஏற்றபடி தமிழகப் பகுதி வழியாகவும், கேரளப் பகுதி வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், குமுளி சாலையில் உள்ள இறைச்சல் பாலம் வழியாக கீழே இறங்கி, லோயர்கேம்ப்பை அடைந்து முல்லைப் பெரியாறாக ஓடி, வைகை அணையில் கலக்கும். இந்நிலையில், இறைச்சல் பாலம் அருகே தண்ணீர் ஆர்ப்பரித்துச் சென்றதால், அதன் அருகே உள்ள சாலையில் சிறிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தமிழக – கேரள போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதன் காரணமாக, வாகனங்களை கம்பம் மெட்டுச் சாலை வழியாகச் செல்ல அறிவுறுத்தினர். தற்போது, நிலச்சரிவைச் சரிசெய்யும் பணியில் வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.