வெளியிடப்பட்ட நேரம்: 10:36 (16/08/2018)

கடைசி தொடர்பு:10:44 (16/08/2018)

கடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி!

வால்பாறையில் மழை வெள்ளத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வால்பாறையில், மழை வெள்ளத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மண்சரிவு

கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக  நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல, கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக, கோவை நகர் பகுதியில் இயங்கும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுவருகிறது.

இதனிடையே, கோவை மற்றும் நீலகிரியில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், நீலகிரி மாவட்டம் மற்றும் வால்பாறையில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக, வால்பாறை மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியில், வேளாங்கண்ணி என்ற பெண் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.

மண்சரிவு காரணமாக, வால்பாறையில் அனைத்து எஸ்டேட்களுக்குச் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மழை காரணமாக வால்பாறை அரசுப் பேருந்து பணிமனையில் வெள்ளம் புகுந்து, டீசல் டேங்குகள் மூழ்கியுள்ளன. இதனால், பேருந்துகள் இயங்க முடியாமல் அனைத்துப் பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பொள்ளாச்சி – வால்பாறையில் மண்சரிவு தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குழுவுக்கு 10 பேர் வீதம் 35 குழுக்களும், ஜே.சி.பி மற்றும் பொக்லைன் வாகனங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு, 1077 என்ற எண்ணுக்கு தகவல்கொடுக்கவும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வால்பாறையில், தனியார் காட்டேஜ்கள், மண்டபங்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக, தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள சமூகக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களைத் தயார்நிலையில் வைத்திருக்கவும் வருவாய்த் துறையினரிடமிருந்து வாய்மொழி உத்தரவு பறந்துள்ளது.