தேசியக்கொடி ஏற்றிய போலீஸ்... கண்ணெதிரே கொலைசெய்யப்பட்ட வாலிபர்- அமைந்தகரையில் நடந்த பயங்கரம்! | Youngster killed in chennai during independence day celebration

வெளியிடப்பட்ட நேரம்: 12:23 (16/08/2018)

கடைசி தொடர்பு:12:23 (16/08/2018)

தேசியக்கொடி ஏற்றிய போலீஸ்... கண்ணெதிரே கொலைசெய்யப்பட்ட வாலிபர்- அமைந்தகரையில் நடந்த பயங்கரம்!

கொலை செய்யப்பட்ட ஆதித்யன்

சென்னை அமைந்தகரை போலீஸ் நிலையம் எதிரில், போலீஸார் கண்ணெதிரே வாலிபர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அரும்பாக்கம், அசோக் நகரைச் சேர்ந்தவர் ஆதித்யன். 21 வயதான இவர், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் கேன்கள் சப்ளை செய்துவந்தார். சுதந்திர தினமான நேற்று காலை, அமைந்தகரை போலீஸ் நிலையம் எதிரே ஆதித்யன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மக்கும்பல், திடீரென ஆதித்யனை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பிச்சென்றது. இந்தச் சமயத்தில் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. இதனால், தேசியக் கொடிக்கு போலீஸார் மரியாதை செலுத்திக்கொண்டிருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப்போராடிக்கொண்டிருந்தார் ஆதித்யன். உடனே அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

இதையடுத்து, சம்பவம் நடந்த இடம் அண்ணாநகர் போலீஸ் எல்லைக்குட்பட்டது என்பதால், அங்குள்ள போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் குணசேகரன், அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கொலைகுறித்து விசாரித்தனர். அப்போது, ஆதித்யன் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. பழிக்குப் பழியாகத்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. இந்தச் சமயத்தில், கொலை நடந்த இரண்டு மணி நேரத்துக்குள் அரும்பாக்கத்தைச் சேர்ந்த சந்தீப்குமார் என்பவரை போலீஸார் பிடித்தனர். அவர்தான் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆதித்யனைக் கொலை செய்துள்ளார் என்பது தெரிந்தது. கொலை வழக்குத் தொடர்பாக சந்தீப்குமார், சபரிநாதன், முருகன், சிலம்பரசன், அரவிந்தன், ராஜா, கார்த்தி ஆகிய ஏழு பேரை போலீஸார் இன்று கைதுசெய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதுகுறித்து  போலீஸார் கூறுகையில், ``கடந்த மாதம் சந்தீப்குமார், அவரின் தம்பி ராஜ்குமார் ஆகியோருடன் ஆதித்யன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நடந்த தகராறில்,  “அண்ணன்-தம்பி இருவரையும் காலிசெய்துவிடுவேன்” என்று ஆதித்யன் மிரட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சந்தீப்குமார், நேற்று தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆதித்யனை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் சந்தீப்குமார் உள்பட ஏழு பேரை கைதுசெய்துள்ளோம்" என்றனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கைதான சந்தீப்குமார், கார் டிரைவராக உள்ளார். இவரின் தம்பி ராஜ்குமார் ப்ளஸ் டூ படிக்கிறார். கடந்த மாதம் ராஜ்குமாரை ஆதித்யன் அடித்துள்ளார். அதைத் தட்டிக்கேட்டதால், ஆதித்யனுக்கும் சந்தீப்குமாருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆதித்யனை சந்தீப்குமார் கொலைசெய்துள்ளார். இந்த வழக்கில் கைதான முருகன் மீது ஏற்கெனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்றார். 

 


[X] Close

[X] Close