வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (16/08/2018)

கடைசி தொடர்பு:13:20 (16/08/2018)

நெரிசலில் சிக்கிய ராகுல் காந்தி! - விளக்கமளிக்க மத்திய-மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

'கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலிசெலுத்த வந்த ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கபடவில்லை' எனத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராகுல் காந்தி

தி.மு.க தலைவர் கருனாநிதி, கடந்த 7-ம் தேதி மாலை உயிரிழந்தார்.  அவரின் உடல், சென்னை ராஜாஜி அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு பல அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் வந்து அஞ்சலிசெலுத்தினர். அன்று, ராஜாஜி அரங்கிற்கு வந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார். பின்னர், அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் நெரிசலைச் சரிசெய்தனர். பிறகு, கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தை ராகுல் காந்தி அடைந்தார். இதனிடையே, தேசிய கட்சியின் தலைவரான ராகுலுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என காங்கிரஸ் தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், ``கருணாநிதியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வருவார்கள் எனத் தெரிந்தும், தமிழக காவல் துறை ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. இதற்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த மனுவுக்கு காவல்துறை அளித்த பதிலில், ராகுல் காந்தி புறப்படுவதை அரைமணி நேரத்துக்கும் முன்பாகவே கூறவில்லை'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் மணி குமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாராணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக  மத்திய உள்துறைச் செயலர் மற்றும் மாநில உள்துறைச் செயலர் ஆகியோர் 4 வாரத்தில் விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.