வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (16/08/2018)

கடைசி தொடர்பு:12:41 (16/08/2018)

' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது?!'  - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்

' மெரினா விவகாரத்தில் உங்களுக்கு எதிராக நாங்கள் இல்லை. எடப்பாடியைத் தவிர்த்து எங்களிடம் வந்திருந்தால் அனைத்தையும் செய்து கொடுத்திருப்போம்' என ஸ்டாலின் தரப்பிடம் பேசியுள்ளனர் பா.ஜ.க தலைவர்கள்.

' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது?!'  - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்

ருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலினுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திருக்கிறார் மு.க.அழகிரி. ' இதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகச் சிலர் பேசுகின்றனர். தி.மு.க கூட்டணியைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இதுதொடர்பாக நிதின் கட்கரி விரிவாகப் பேசியிருக்கிறார்' என்கின்றனர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள். 

சென்னை, மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி சமாதிக்குக் கடந்த 13-ம் தேதி காலை வந்த அழகிரி, ' கருணாநிதியின் விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர்' எனக் கூறிவிட்டுச் சென்றார். அவரது பேட்டி, அறிவாலய வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மறுநாள் அறிவாலயத்தில் கூடிய தி.மு.கவின் அவசர செயற்குழுவிலும் இந்த விவகாரம் பேசப்படவில்லை. தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகளும் மறைமுகமாகவே அழகிரியை விமர்சித்தனர். இந்நிலையில், நேற்று உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் சில விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தின் இறுதி வரிகளில், ' நாம் நிறைவேற்றி முடிக்க வேண்டிய சவாலான பணிகள் நிறைய இருக்கின்றன. கழக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் சிகரமாக உயர்ந்திருந்த தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள் மாநில ஆட்சியாளர்கள். மதவெறியை விதைத்து - மாநில உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள். தலைவரை இழந்த கழகத்தில் என்ன நடக்கிறது என்பதில் நம்மை விட ‘அக்கறை’ காட்டுகிறார்கள் அரசியல் எதிரிகள். ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கலாமா என நப்பாசை கொண்டிருக்கிறார்கள். நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன். கழகத்திற்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். 

மு.க.அழகிரிஅழகிரியை அருகில் வைத்துக் கொண்டு தி.மு.கவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் வேலையில் சிலர் ஈடுபட்டிருப்பதையே கடிதத்தின் மூலம் சுட்டிக் காட்டியிருந்தார் ஸ்டாலின். இது நேரடியாக பா.ஜ.கவைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்திருந்தது. இதுதொடர்பாகக் கடந்த சில நாள்களாக விவாதம் நடந்து வரும் சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மூலம் தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியிருக்கிறார் பா.ஜ.க மேலிட நிர்வாகி ஒருவர். அப்போது பேசிய நிதின் கட்கரி தரப்பினர், ' அழகிரியை நாங்கள் ஊக்குவிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆர்.கே.நகர் தேர்தலின்போதே தமிழிசை மூலமாக ஸ்டாலின் கவனத்துக்கு சில விஷயங்களைக் கொண்டு சென்றோம். ' இடைத்தேர்தலில் தி.மு.க நிச்சயம் தோற்றுப் போகும். பா.ஜ.க கூட்டணி உறுதிப்படுத்தினால் தேர்தலை ரத்து செய்வோம்' எனக் கூறியிருந்தோம். எங்கள் கருத்தை அப்போது ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளவில்லை. தவிர, ஆர்.கே.நகர் தேர்தலை நாங்கள் தமிழ்நாடு முழுமைக்குமான தேர்தலாக நினைக்கவில்லை. உங்களுக்கு(தி.மு.க) 32 சதவீத வாக்குகள் இருப்பதாக அறிகிறோம். மோடி தலைமைக்கு 8 சதவீத வாக்குகள் கிடைக்கும். இரண்டு சேர்ந்தால் 40 சதவீத வாக்குகள் கிடைக்கும். 

அதேநேரம், எடப்பாடி பழனிசாமிக்கு 25 சதவீத வாக்குகளும் தினகரன் அணிக்கு 8 சதவீத வாக்குகளும் இருப்பதாக அறிக்கைகள் சொல்கின்றன. அந்த வகையில் கணக்குப் போட்டால்கூட, தி.மு.க-பா.ஜ.க அணி 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இந்தத் தியரியை ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார் டாக்டர்.தமிழிசை. அவரிடம் இருந்து இதுவரையில் எந்தப் பதிலும் வரவில்லை. ரஜினியின் அரசியல் வருகையை ஸ்டாலின் விரும்பவில்லை. அதனால்தான், ' திடீரென வரும் நடிகர்களால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது' எனத் தமிழிசை மூலமாகப் பேச வைத்தோம். ரஜினிக்கு எதிரான விமர்சனத்தை அவர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். நீங்கள் சம்மதித்தால் கூட்டணி சேரலாம்' என விவரித்தவர், தொடர்ந்து பேசும்போது, ' நாங்கள் அனைத்து விதத்திலும் கருணாநிதிக்கு சிறப்பு சேர்த்தோம். மெரினா விவகாரத்தில் உங்களுக்கு எதிராக நாங்கள் இல்லை. எடப்பாடியைத் தவிர்த்து எங்களிடம் வந்திருந்தால் அனைத்தையும் செய்து கொடுத்திருப்போம். எங்களை ஏற்றுக் கொள்வதைப் பற்றி ஸ்டாலின் எந்தப் பதிலும் சொல்லவில்லை. இன்றைய சூழலில் கருணாநிதி இருந்திருந்தால்கூட எங்களை ஏற்றிருப்பார்' என ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார். இந்தத் தகவலை ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லும்படியும் வேண்டுகோளாக வைத்துள்ளனர் நிதின் கட்கரி தரப்பினர். 

" பா.ஜ.க அணிக்குள் வருவது குறித்து ரஜினி எந்தப் பதிலையும் சொல்லாமல் இருக்கிறார். ' நாளை அவர் வராமல் போய்விட்டால் என்ன செய்வது?' என்ற அச்சத்திலேயே, தி.மு.க அணிக்குள் இணைவது குறித்து பா.ஜ.க தலைவர்கள் பேசி வருகின்றனர். ' கூட்டணியை ஸ்டாலின் உறுதி செய்துவிட்டால், அமித் ஷா நேரடியாக ஸ்டாலினை சந்திக்க வருவார். அவர் மௌனமாக இருந்தால், மூத்த தலைவர் யாரையாவது அனுப்பி பேச வைப்பார்' என பா.ஜ.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர். தி.மு.க நிர்வாகிகள் சிலர் பேசும்போது, ' பா.ஜ.க கூட்டணியை ஏற்றுக் கொண்டால், எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்ந்துவிடும். அதன்மூலம் வரக்கூடிய சாதகங்களைப் பார்க்கலாம்' எனக் கூற, ' எடப்பாடிக்கு எதிராக மோடி எடுக்கக் கூடிய நடவடிக்கைகளால் அ.தி.மு.க தரப்பு வலுவாகிவிடும்' என வேறு சில நிர்வாகிகளும் பேசத் தொடங்கியுள்ளனர். கருணாநிதி மறைந்துவிட்ட சூழலில், அனைத்து விவகாரங்களையும் நிதானமாகவே கையாளும் முடிவில் இருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின்" என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.