வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (16/08/2018)

கடைசி தொடர்பு:20:54 (16/08/2018)

தமிழகத்தின் பெருமை பேசிய தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுதந்திர தின உரை குறித்த கட்டுரை...

தமிழகத்தின் பெருமை பேசிய தமிழக முதல்வர்!

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "வடமாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தை உயர்வாகக் குறிப்பிட்டுப் பேசியது பெருமையாக இருக்கிறது" என்கின்றனர், அரசியல் ஆர்வலர்கள்.

இந்தியாவின் 72-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெற்ற விழாவில், புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது முறையாகத் தேசியக்கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார். 

எடப்பாடி பழனிசாமி

அப்போது, ``பல்லாயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களது உடைமைகள் மற்றும் இன்னுயிரை ஈந்து பல வருடங்கள் பாடுபட்டதன் விளைவாக ஆங்கிலேயர்களிடம் இருந்து பெறப்பட்டதுதான் சுதந்திரம். இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்துக்காகத் தங்கள் இன்னுயிரைத் துச்சமென மதித்து, உயிர்த் தியாகம் செய்த தியாகச் செம்மல்கள் நிறைந்திட்ட மாநிலம் நமது தமிழ்நாடு. தேசத் தந்தை மகாத்மா காந்தி காட்டிய அகிம்சை வழியிலேயே அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் வாழ்ந்த இடம் என்ற பெருமையைப் பெற்றது நம்முடைய தமிழ்நாடு. தொடக்கத்தில் ஆயுதம் ஏந்திய போர்தான், காந்தியடிகளின் பின்னால் அணிவகுத்து அறப்போராக மாறியது. ஆயுதப் போரிலும், அறப்போரிலும் அதிகப் பங்கு வகித்தது நமது தமிழ்நாடுதான் என்று சொல்லிக்கொள்வதில் நாம் பெருமை கொள்ளலாம்'' என்று தமிழகத்தின் பெருமையையும், சுதந்திரத்துக்காக உயிர்நீத்த தலைவர்களையும் பட்டியலிட்டார் முதல்வர். மேலும், அவர் தன் உரையில், வெள்ளையர்களுக்கு எதிராகத் தமிழகத்தின் வேலூரில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியையும் நினைவுகூர்ந்தார். 

``வட இந்தியாவில் நடந்த சிப்பாய்ப் புரட்சிதான், இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்பது வரலாறு. ஆனால், அதற்கு முன்பே கிட்டத்தட்ட, அதே காரணங்களுக்காக வெள்ளையர்களுக்கு எதிராக வேலூரில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள் ஒரு புரட்சி நடந்தது. ஆகவே, இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்கான வேள்வி, தமிழ்நாட்டில்தான் ஆரம்பித்தது என்பதை எண்ணி நாம் பெருமை கொள்ளலாம்'' என்றார் எடப்பாடி பழனிசாமி

காவிரிப் பிரச்னையைத் தீர்க்க அ.தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்ட முதல்வர், `` `சோழ வளநாடு சோறுடைத்து' எனும் சொலவடையை நனவாக்கும் விதமாக, இவ்வருடம் தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரைத் தொடர்ந்து என் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக அரசாலும் நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பினைத் தமிழக அரசு பெற்றுத் தந்தது'' என்றார்.

எடப்பாடி பழனிசாமி

அதுபோல், ``உயர்கல்வி சேர்க்கையில் மாணவர்களின் எண்ணிக்கை, இன்றைய தினம் 48.6 சதவிகிதமாக உயர்ந்து இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது'' என்றும், ``சுற்றுலாத் துறையிலும் தமிழ்நாடு முத்திரை பதித்துள்ளது'' என்றும் பெருமையோடு குறிப்பிட்டார். மேலும், ``தமிழகத்தில் சாதி, மதம், மொழி, இனம் மறந்து அனைவரும் சகோதர, சகோதரிகளாக ஒரு குடும்பம்போல் வாழ்ந்து வருகின்றனர். மதச்சார்பின்மையைப் பின்பற்றும் ஓர் உன்னத மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது'' என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் உரையில் தமிழகத்தைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 

இப்படி, சுதந்திர தின உரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை உயர்வாகக் குறிப்பிட்டுப் பேசியது குறித்து அரசியல் ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம். ``சுதந்திர தின விழாவில், எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை உயர்த்திப் பேசியிருப்பது பெருமையாக இருக்கிறது. அதிலும் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பட்டியலிட்டும், அவர்களின்  தியாகங்கள் பற்றியும், வெள்ளையர்க்கு எதிராகத் தமிழகத்தில் நடந்த வேலூர்ப் புரட்சி பற்றியும் குறிப்பிட்டு முதல்வர் பேசியிருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான். வரலாற்றுப் புத்தங்களில் மட்டுமே இடம்பிடித்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளை, உரிய நேரத்தில் இதுபோன்ற தருணத்தில் அவர் நினைவுகூர்ந்ததுடன், அவர்களின்  தியாகத்தினையும், பெருமைகளையும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு, ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர நாளில், நம் தியாகிகளை நினைவுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்து, அவர் தன் உரையை நிகழ்த்தியிருப்பது மிகமிக வரவேற்கவேண்டியதாகும். மேலும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை 15,000 ரூபாயாக உயர்த்தி இருப்பதுடன், அவர்களின் வாரிசுதாரர்களின் ஓய்வூதியத்தை 7,500 ரூபாயாகவும் உயர்த்தி, சிறப்புச் செய்திருப்பதை உளமாற வரவேற்கிறோம்'' என்றனர், மிகத் தெளிவாக.

மத்திய பி.ஜே.பி. அரசின் கைப்பாவையாகத் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது எதிர்த்த மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் எடப்பாடி அரசு தமிழகத்தில் அனுமதித்து விட்டது என்றும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்துக் கொண்டிருக்கும் சூழலில், வட மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தை முதல்வர் உயர்த்திப் பிடிக்கும் வகையில் ஆற்றியுள்ள உரை, அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கலாம். தவிர, `முதல்வர் தன் பேச்சின் மூலம் தமிழகத்தை உயர்த்தத் தொடங்கிவிட்டார்' என்ற குரல்களையும் பரவலாகக் கேட்க முடிகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்