முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 138 அடியாக குறைக்க முடியுமா? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை சில நாள்களுக்கு 138 அடியாக குறைக்க முடியுமா? எனத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முல்லைப் பெரியாறு

கடந்த ஒருவார காலமாக கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள 22 அணைகளும் நிரம்பியுள்ளன. இதனால் அணைகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 16,629 கன அடியாக உள்ளது. இதே நேரத்தில், 2,200 கனஅடி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதற்கிடையே, `முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்குத் தண்ணீர் இருப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். எனவே, நீர்மட்டத்தை 139 அடியிலேயே பராமரிக்க வேண்டும்' என கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமருக்கும் பினராயி கடிதம் எழுதினார். 

இந்தக் கடிதத்துக்குப் பதிலளித்துள்ள தமிழக முதல்வர், `முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால் அணையின் நீர்மட்டத்தை குறைக்கத் தேவையில்லை' எனக் கூறியுள்ளார். இந்நிலையில், `இடுக்கி மாவட்ட மக்கள் பயத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 138 அடியாக குறைக்க வேண்டும். அணை நீரை திறந்துவிடுவதில் தமிழக அதிகாரிகள் மெத்தனம் காட்டுகிறார்கள். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அணையில் தண்ணீர் திறந்துவிடுகிறார்கள்' எனக் கூறி இடுக்கி பகுதியைச் சேர்ந்த ரசுல் ஜாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கில் கேரள அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், `அணையின் நீர்மட்டத்தைக் குறைத்தால் தற்போதுள்ள நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்' எனக் கோரிக்கை விடுத்தார். அப்போது பேசிய நீதிபதிகள், ``அணைப் பாதுகாப்பில்லை என கற்பனையாக கூற வேண்டாம். சரியான ஆதாரங்களை தாக்கல் செய்து வாதங்களை முன்வையுங்கள்" என மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ``கனமழை பெய்து வருவதால் நீர்மட்டத்தைக் குறைக்க முடியுமா?" என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், `அணை நிலவரம், பாதுகாப்பு, இயற்கை பேரிடர் ஆகியவை குறித்து மத்திய, கேரளா, தமிழக அரசு அதிகாரிகள் அடங்கிய அணை துணைக்கண்காணிப்புக் குழு நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' எனக் கூறி வழக்கு விசாரணையை நாளை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!